Published : 17 Jun 2020 04:28 PM
Last Updated : 17 Jun 2020 04:28 PM

சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்த சிறந்த வழி: தமிழக முதல்வருக்கு சேரன் வேண்டுகோள்

சென்னை

சென்னையில் கரோனா அச்சுறுத்தி வரும் வேளையில், தமிழக முதல்வருக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலைத் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறு தளர்வுகளை மட்டும் அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போது சென்னையில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சென்னையிலிருந்து பலர், பல்வேறு வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதில் இ-பாஸ் இல்லாமல் செல்பவர்களைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது சென்னையில் கரோனா தொற்று இல்லாதவர்களைச் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளப் பதிவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களைக் குறிப்பிட்டு கூறியிருப்பதாவது:

"அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் பயமும் கரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கிக் கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்.

15 நாட்களில் முடிந்துவிடும் என நினைத்து சொந்த ஊருக்குப் போகாமல் தங்கியவர்கள் நிறைய. இப்போது போக நினைக்கிறார்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியிலிருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கும் அதன் மூலம் பரவும் அபாயம் இருக்கிறது.

எனவே, சென்னையில் கரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்த வழி சென்னையில் வாழும் நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்குப் பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களைக் கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.

மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல நினைக்கிறார்கள்.. அது நியாயமும் கூட.. அதற்காக முறையே யோசித்துச் செயலாற்ற வேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்".

இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x