Published : 29 May 2020 09:02 PM
Last Updated : 29 May 2020 09:02 PM
கரோனா ஊரடங்கில் குறித்து தன் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தது குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சியூட்டும் பகிர்வொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. தமிழ்த் திரையுலகில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், இன்னும் சில கோரிக்கைகளை வைத்துள்ளது பெப்சி அமைப்பு.
கரோனா ஊரடங்கினால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"என்னுடைய 18 வயதிலிருந்து என் வாழ்க்கை ஒரு மாரத்தான் போல இருக்கிறது. முடியும் இடம் வந்துவிட்டது என்று நான் நினைக்கும் போதெல்லாம் பந்தயம் மீண்டும் தொடங்கிவிடும். இதை நான் புகாராக சொல்லவில்லை. இதைதான் நான் எப்போதும் விரும்பினேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என் வாழ்க்கையில் இவ்வளவு நாள் நான் வீட்டில் இருந்ததில்லை.
என்னுடைய பள்ளியிலிருந்து உயர்கல்வி வரை ஹாஸ்டலில் கழித்தேன். என் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள் என்று அடிக்கடி நினைத்தேன். ஆனால் என் டீன் ஏஜில் நான் ஒரு போராளியைப் போல இருந்தேன். இரவு நேர படப்பிடிப்பின் போது செட்டில் என் அம்மாவும் என்னோடு இருப்பார், குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் அளவுக்கு அப்பாவிடம் வசதி இருந்தது. என்னுடைய குட்டி தங்கை தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை சமாளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.
இந்த ஊரடங்கின் போது 2 மாதங்களுக்கும் மேலாக நான் என் வீட்டில் கழிக்கிறேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் நாங்கள் வேலையை பற்றி பேசுவதில்லை, அவர்கள் முழுக்க முழுக்க என் மீது அக்கறை கொண்டுள்ளார்கள். எல்லாவற்றையும் சமாளிக்கும் வலிமையை அவர்கள் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இது தான் என்னுடைய மகிழ்ச்சியான இடம்.
இந்த அமைதியையும், மகிழ்ச்சியையும் நான் உணர்வேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் நம்புங்கள், குடும்பம்தான் நம் வீடு, வேலையிலிருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் மீண்டும் திரும்பி வந்து அமைதியை உணர்ந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி"
இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT