Published : 26 May 2020 05:45 PM
Last Updated : 26 May 2020 05:45 PM
சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க பெப்சி மற்றும் சின்னத்திரை கூட்டமைப்பு மேலும் சில கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளது
தமிழ்த் திரையுலகில் கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே தொடங்காமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தொழில்துறைக்கு 50% பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகினரும் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி கோரினார்கள்.
இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளித்தது தமிழக அரசு. அதில் பல்வேறு படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டாலும், சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. ஏனென்றால், 20 பேருடன் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்திக் கொள்ளவே தமிழக அரசு அனுமதியளித்தது.
இதனைத் தொடர்ந்து பெப்சி அமைப்பு, தொழில்துறை போலவே 50% பணியாளர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. மேலும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஸ்டெப்ஸ் அமைப்பைச் சேர்ந்த சுஜாதா விஜயகுமார் மற்றும் குஷ்பு, மனோபாலா உள்ளிட்டோர் இன்று (மே 26) காலை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்துப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:
"சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதியளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்தோம். மேலும், சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால் இதர துறைக்கு 50% தொழிலாளர்களுடன் அனுமதி கொடுத்துள்ளார்கள். சின்ன தொடராக இருந்தால் 100 பேர் வரை இருப்பார்கள். பெரிய தொடராக இருந்தால் 200 பேர் இருப்பார்கள்.
தற்போது 20 பேர் என்றால் நடிகர்களே 20 பேர் வந்துவிடுவார்கள். சின்னத்திரை படப்பிடிப்பு என்பது 60 பேர் வரை இல்லாமல் ஆரம்பிக்கவே முடியாது. ஆகையால் 24 யூனியன் இருக்கிறது. யூனியனுக்கு ஒருவர் என்றாலே 24 பேர் வந்துவிடுவார்கள். ஆகையால் நடிகர்கள் எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் 50 பேர் கொண்டு படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
சின்னத்திரை சங்கம் தரப்பிலிருந்து என்ன கோரிக்கை என்றால், படப்பிடிப்புக்கு வெளியூரிலிருந்து நடிகர்கள் வருவார்கள். அவர்கள் கரோனா நெகடிவ் என்ற சான்றிதழுடன் வந்தால் தனிமைப்படுத்தக் கூடாது என்று கேட்டிருக்கிறோம். அதை பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல்வரிடம் பேசிவிட்டு சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் பேசி முடிவானால் தான் படப்பிடிப்பு தொடங்க முடியும்"
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
குஷ்பு பேசும் போது, "போட்டி போட்டுக் கொண்டு படப்பிடிப்பைத் தொடங்க விரும்பவில்லை. ஏனென்றால் முதலில் பாதுகாப்பு தான் முக்கியம். அனைத்துக்கும் முறையான அனுமதி கிடைத்தவுடன், ஒரே சமயத்தில் அனைத்து சீரியல் படப்பிடிப்பும் தொடங்கும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT