Published : 22 May 2020 09:21 PM
Last Updated : 22 May 2020 09:21 PM
சிவாஜிக்குப் பிறகு அசலான நடிகர் வடிவேலு தான் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கில் அனைவருமே நேரலையில் பேட்டி மற்றும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு தனியார் யூடியூப் இணையதளம் ஒன்று ஒருங்கிணைத்த கலந்துரையாடலில் பயிற்சியாளர் பாசு ஷங்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினேஷ் கார்த்திக் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே உடற்பயிற்சியாளராக பாசு ஷங்கர் இருந்து வருகிறார். இந்த கலந்துரையாடலில் சிவாஜிக்குப் பிறகு வடிவேலு தான் அசலான நடிகர் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
அந்தப் பகுதி:
பாசு ஷங்கர்: உங்களுக்கு என்ன மாதிரியான படங்கள் பிடிக்கும்?
வெற்றிமாறன்: கடந்த சில வருடங்களாக நான் வடிவேலு நகைச்சுவையைப் பார்த்து வருகிறேன். அதைத்தான் அதிகமாகப் பார்க்கிறேன். தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டு ஓடிடி தளங்களுக்குள் சென்ற பின், சில வெப் சீரிஸ் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். எனக்கு நிறைய நகைச்சுவைப் பார்ப்பது பிடிக்கும்.
சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் 'கேபர்நாம்' என்ற லெபானியப் படத்தைப் பார்த்தேன். நன்றாக இருந்தது. கான்ஸில் விருது பெற்றது என நினைக்கிறேன்.
(இதனைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் வெற்றிமாறன். இறுதியாக....)
பாசு ஷங்கர்: - வடிவேலுவா, கவுண்டமணியா?
வெற்றிமாறன்: - வடிவேலு தான். சிவாஜி கணேசனுக்குப் பிறகு வடிவேலு தான் அசலான (original) நடிகர் என நினைக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT