Published : 20 May 2020 07:27 PM
Last Updated : 20 May 2020 07:27 PM
'முந்தானை முடிச்சு' படத்தை பாக்யராஜ் இயக்கவில்லை, புதுமுக இயக்குநர் ஒருவரே இயக்கவுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.
1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'முந்தானை முடிச்சு'. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் ஊர்வசி, தீபா, கே.கே.செளந்தர், 'பசி' சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்திருந்தனர்.
இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு 'முந்தானை முடிச்சு' படம் ரீமேக் ஆகிறது.
இன்று (மே 20) காலை 'முந்தானை முடிச்சு' ரீமேக்கில் பாக்யராஜ் - சசிகுமார் இணைகிறார்கள் என்று படக்குழுவினர் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்துடன் அறிவித்தார்கள். உடனே, பாக்யராஜ் தான் மீண்டும் இயக்குநர் பொறுப்பை ஏற்கவுள்ளார் என்று பலரும் செய்திகளை வெளியிட்டனர்.
ஆனால், நடப்பதோ வேறு. என்னவென்றால் 'முந்தானை முடிச்சு' ரீமேக்கிற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளை மட்டுமே பாக்யராஜ் ஏற்கவுள்ளார். இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. மேலும், இந்தக் கூட்டணி இணைந்ததில் ஒரு சுவாரசியம் உள்ளது.
என்னவென்றால், பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான படங்களுள் 3 படத்தை ரீமேக் பண்ண வேண்டும் என்பது சசிகுமாரின் ஆசை. அந்த ஆசை தற்போது 'முந்தானை முடிச்சு' மூலம் நிறைவேறியுள்ளது. ஏ.வி.எம் நிறுவனத்திடமிருந்து 'முந்தானை முடிச்சு' ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் இயக்குநர் பாக்யராஜ். அதனைத் தொடர்ந்து பாக்யராஜ் - சசிகுமார் இருவரிடமும் பேசி இந்தப் படத்தின் ரீமேக் பணிகளைத் தொடங்கியுள்ளது ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம்.
புதிய இயக்குநர் ஒருவர்தான் இயக்குவார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். 'முந்தானை முடிச்சு' படத்தின் அனைத்துக் கதாபாத்திரங்களுமே மிகவும் பிரபலமானது என்பதால், கதாபாத்திரங்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT