Published : 20 May 2020 01:39 PM
Last Updated : 20 May 2020 01:39 PM
ஊரடங்கால் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் அரசு தளர்வை அறிவித்து ம்துக்கடைகளைத் திறந்தாலும் உயர் நீதிமன்ற உத்தரவால் கடைகள் மீண்டும் மூடப்பட்டன. அதன்பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.
டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
''நண்பர்களே, ரசிகர்களே, தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. டாஸ்மாக் வெளியே குவிந்த மக்களைப் பார்த்த பிறகு, என்னுடன் சேவை செய்து வரும் என் அம்மாவும், இன்னும் சிலரும் என்னிடம் கேள்வி கேட்டனர்.
'நாம் கடுமையாக உழைத்து மற்றவர்களுக்கு உதவுகிறோம். ஆனால் இவர்கள் எவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா' என்று கேட்டனர்.
என்ன அம்மா, நண்பர்கள் மட்டுமல்ல, நாம் சரியானவர்களுக்குத்தான் சேவை செய்கிறோமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதனால் இதை நான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
குடும்பத்தில் ஒருவர் குடிக்கிறார் என்பதற்காக நாம் சேவையை நிறுத்தினால், அந்த நபரின் அம்மா, மனைவி, குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள். பல குடும்பங்களுக்கு வீடே இல்லை. குடிப்பவர்களைத்தான் நாம் செய்திகளில் பார்க்கிறோம். ஆனால் நிறைய ஆண்கள் குடிக்காமல் தனது குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்யக் கஷ்டப்படுகின்றனர். அதனால் தயவுசெய்து உதவுவதை நிறுத்தாதீர்கள்.
மது குடிப்பவர்கள் அனைவருக்கும் என் சிறிய வேண்டுகோள். குடிப்பதற்கு முன் பசியால் வாடும் உங்கள் குழந்தையின் கண்ணீரை நினைத்துப் பாருங்கள். நேர்மறை சிந்தனையைப் பரப்புவோம். சேவையே கடவுள்''.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT