Published : 19 May 2020 09:50 AM
Last Updated : 19 May 2020 09:50 AM
இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இளவயது புகைப்படத்தை பகிர்ந்து அதோடு சிறுவயதில் தான் அனுபவித்த துயரங்களைப் பற்றி ஒரு உருக்கமான பதிவையும் எழுதியுள்ளார். அதோடு இளவயதில் இருக்கும் தனக்கு இப்போது இருக்கும் அவர் அறிவுரை வழங்குவதுபோல அந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.
அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
அன்புள்ள செல்வா (வயது 14),
உன் உருவத்தை வைத்து இவ்வுலகம் உன்னை பார்த்து சிரிக்கிறது. ஏனென்றால் நீ ஒரு மாற்று திறனாளி. உனக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு உள்ளது. நீ எங்கே சென்றாலும் மக்கள் உன்னை பார்த்து சிரிக்கிறார்கள் அல்லது கேலி செய்கிறார்கள். அதை நினைத்து ஒவ்வொரு இரவும் நீ அழுகிறாய்.
சில நேரங்களில் ‘ஏன் என் கண்ணை பறித்தாய்’ என்று கடவுளிடம் கேட்கிறாய். ஆனால் கவலைப்படாதே செல்வா. இன்னும் சரியாக பத்தே வருடங்களில் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படத்தை எழுதப் போகிறாய். அது உன் வாழ்வையே மாற்றப் போகிறது. இதே உலகம் அப்போதும் உன்னை பார்க்கும். ஆனால் கேலி செய்யும் நோக்கத்தோடு அல்ல. மாறாக மரியாதையுடனும், நம்பிக்கையுடனும். இன்னும் 10 வருடங்களில் சிறந்த படங்களை எடுத்து தமிழ் சினிமா வரலாற்றில் நீ இடம்பிடிப்பாய்.
மக்கள் உன்னை ‘ஜீனியஸ்’ என்று அழைப்பார்கள். உன்னுடைய சிறுவயதில் உனக்கு ஒரு துர்சம்பவமாக அமைந்த அந்த கண்ணை அப்போது மக்கள் பார்க்கமாட்டார்கள். தனது படங்களின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய ஒரு மனிதனை அவர்கள் பார்ப்பார்கள். எனவே தைரியமாக இரு.
கடவுள் உன்னிடமிருந்து மதிப்புமிக்க ஒன்றை எடுத்துக் கொண்டால் அதை விட அபரிமிதமான ஒன்றை உனக்கு திருப்பித் தருவார். எனவே உற்சாகமாக இரு. புகைப்படங்களில் சிரி. (என்னால் நீ சிரிக்கும் ஒரு புகைப்படத்தை கூட கண்டுபிடிக்க முடியவில்லை) ஏனெனில் வரும் ஆண்டுகளில் உன்னுடைய பல புகைப்படங்கள் எடுக்கப்பட போகின்றன.
இயக்குநர் செல்வராகவன் (வயது 45).
இவ்வாறு செல்வராகவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT