Published : 17 May 2020 08:52 PM
Last Updated : 17 May 2020 08:52 PM

மிக்சர் சாப்பிடும் கதாபாத்திரம் உருவானதன் சுவாரசியப் பின்னணி: கே.எஸ்.ரவிகுமார் பகிர்வு

மிக்சர் சாப்பிடும் கதாபாத்திரம் உருவானதன் சுவாரசியப் பின்னணி குறித்து கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்துள்ளார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் 'நாட்டாமை'. சரத்குமார், மீனா, விஜயகுமார், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி - செந்தில் காமெடிக் காட்சிகள் மிகவும் பிரபலம். குறிப்பாக கவுண்டமணிக்கு பெண் பார்க்கப் போகும் போது ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் கேரக்டரை முன்வைத்து இப்போது வரை பலரும் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தக் கரோனா ஊரடங்கில் நடிகர் ஆரவ் - இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இருவரும் நேரலையில் கலந்துரையாடினார்கள். அப்போது இந்த மிக்சர் சாப்பிடும் கேரக்டர் உருவாக்கியதன் பின்னணியைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.

"முதலில் அந்தக் கேரக்டருக்கு அவரை நடிக்க வைக்கும் எண்ணமே இல்லை. வேறொருவரைத் தான் முடிவு பண்ணினோம். காமெடிக் காட்சியை எழுதி முடித்தவுடன், பார்க்கவரும் பெண்ணின் தற்போதைய அப்பா ஒருவர் வேண்டும் என்று அந்தச் சமயத்தில் தோன்றியது. இங்கிருந்து கூட்டிக் கொண்டு போன கம்பெனி நடிகர்கள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருப்பவர்கள் யாருமே செட் ஆகவில்லை. கொஞ்சம் வெள்ளையாக இருக்க வேண்டும்யா என்றேன்.

படப்பிடிப்புத் தளத்தில் ஸ்விட்ச் போர்டு அருகில் உட்கார்ந்து பணிபுரிபவர் இவர். 'அவரைக் கூட்டிக்கொண்டு வா' என்றேன். அவரோ உடனே பயந்துபோய் என்ன சார் ஆச்சு என்று பயந்துகொண்டே வந்தார். சும்மா உட்காருய்யா என்று சொன்னேன். சும்மா உட்கார்ந்திருந்தால் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என்று கவுண்டமணியும் செந்திலும் சொன்னார்கள். அப்படியா, உடனே கையில் தட்டு கொடு.. போய் மிக்சர் ஏதாவது வாங்கிட்டு வாங்கடா என்று சொன்னேன்.

'மிக்சர் சாப்பிட்டுட்டு இருப்பா, உனக்கு வசனமே கிடையாது' என்றேன். என்ன கேட்டாலும் மிக்சர் சாப்பிடு, உடனே அவர்கள் ஏதாவது சொல்லிக் கொள்வார்கள் என்று சொன்னேன். டயலாக் அவருக்கு வராது என்பதால் அவருக்கு மிக்சர் கொடுத்தேன். அதைப் பார்த்தால் இப்போது மிக்சர் மாமா என்று பரவிவிட்டது. அந்த வசனங்கள் எல்லாம் கவுண்டமணியால்தான் இன்னும் ஃபேமஸ் ஆச்சு".

இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x