Published : 16 May 2020 09:19 PM
Last Updated : 16 May 2020 09:19 PM
தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வரும் காலம் இது. ஆனால், வாழ்க்கையை ஆழமாக ஊடுருவிச் செல்லும் கதைக் களம் கொண்ட திரைப்படங்களில், பாடல்கள் கதை சொல்லும் கருவிகளாக மாறிவிடுகின்றன. ‘வெள்ளை யானை’ படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் ஐந்து பாடல்களைக் கேட்டபோது, அப்பாடல்களின் தன்மை கதாபாத்திரங்கள் வாழும் வேளாண் நிலப்பரப்பையும், அங்கு காலம் காலமாய் வேரோடிக் கிடக்கும் பசுமைபோர்த்தி விவசாய வாழ்க்கையும் மனத்திரையில் விரித்தன. இயக்குநர் சுப்ரமணியம் சிவா - சமுத்திரக்கனி இணையுடன் சந்தோஷ் நாராயணனும் சேர்ந்துகொண்டால் மண் வாசனைக்கு கேட்கவா வேண்டும்!
நேற்று இணையத்தில் வெளியான ‘வெள்ளை யானை’ படத்தின் ‘ஜூக் பாக்ஸ்’ கேட்டபோது, தஞ்சை மண்ணின் வேளாண் பெருவாழ்வு காக்கப்பட வேண்டியதின் அவசியத்தை இசையின் வழியாகவே உணர்த்திவிடுகின்ற பாடல்களாக ஒலிப்பதை உணர முடிந்தது. படம் இன்னும் பல ஆச்சரியங்களை தன்னுள் வைத்திருக்கும் என்பதைப் பாடல்கள் ஒலிக்கும் சூழ்நிலைகள் உணர்த்துகின்றன. ஐந்து பாடல்களையும் கேட்டபோது அவை தனித்தனியே கிளர்த்திய உணர்வுகள் இவை.
‘வெண்ணிலா விண்ணுல இல்ல’ பாடலில் ... ‘ஏரிக்கர ஓஓஓஓஓரரரம்ம்ம்’ என்ற ஹம்மிங் அப்படியே தஞ்சையின் தண்ணீர் வளம் நிறைந்த ஆடிப் பட்ட நாட்களுக்கு அழைத்துப்போய்விடுகிறது. விஜய்நரேன் - சங்கீதா கருப்பையா குரலிணை சான்ஸே இல்லை என்று சொல்ல வைக்கிறது! உமாதேவியின் மண் மணக்கும் வரிகளில், விளைந்து தலை கவிழ்ந்த பயிர்களுக்கு நடுவே, வரப்பில் நடந்துவரும் நாயகன் - நாயகியின் மகிழ்ச்சியான முகங்கள் மனத்திரையில் நிழலாடுகின்றன. அதிலும் ‘அல்லிக்கொளம் தான் சேரும் ஆத்து தண்ணீ நீதான்யா’ என்ற நாயகியின் மனதை வெளிப்படுத்தும் வரி, தஞ்சை மண்ணுக்கே உரிய உழைக்கும் பெண்ணின் மன வரியாக அல்லவா ஒலிக்கிறது!
இயக்குநர் ராஜுமுருகனின் வரிகளில் ‘ஆரத்தேடும்...?’ குறும்பாடலின் வரிகளில் இடம்பெற்றிருக்கும் பட்டியல், தஞ்சையின் மறையாத கிராமியச் சித்திரங்களை தனித் தனி ஒளிப்படங்களாக மனத்திரையில் படம் காட்டுகிறது. இப்பாடலில் வாத்தியங்களின் எண்ணிக்கையை இசையமைப்பாளர் குறைத்திருக்கலாம்.
‘தந்தோம் தன தந்தோம்’ பாடலில் பார வண்டி ஓட்டிச்செல்லும் ஒரு விவசாயின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. முகேஷ் உற்சாகம் குறையாமல் பாடியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் பாடலின் இசைக் கோவைக்கு தேர்வு செய்த வாத்தியங்கள் மயக்குகின்றன. குழலிசை காது மடல்களை ஒரு குழந்தையின் விரல்களாய் மாறி வருடிவிடுகிறது.
'வாழ வெச்சோனே’ பாடல் கண்ணீரைப் பெருக்குகிறது. ஊருக்கெல்லாம் படியளந்தவனின் வாழ்க்கை, புலம்பெயர்கையில் நொறுங்கிபோகும் தருணங்களை உயிர் உருக்க பாடுகிறது விஜய்நரேனின் குரல். ‘ஓஓஓஓஓ...’ என்ற அவரது குரலின் சோக ஓலம், இதயத்தை வங்கக் கடலின் சூழிக்காற்றாய் நொறுக்குக்கிறது. பாடலாசிரியர் அறிவை, தமிழ் வாழ்க்கையைப் பேசும் படங்களுக்கு தமிழ்த் திரையுலகம் இன்னும் நிறையப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கத் தோன்றுகிறது.
இழந்த வாழ்க்கையை, மீண்டும் ஈரம் சொறியும் மண்ணிலிருந்தே உழைப்பின் வழியாக மீட்டுக்கொள்ளலாம் எனும் தன்னம்பிக்கையை நூறு நூறு விதைகளாய் குழந்தைப் பாடகர்களின் குரலுடன் இணைந்து விதைக்கிறது ‘நெல்லு வாசம்’ பாடலில் இழையும் சந்தோஷ் நாராயணனின் குரல். உண்மையில் இப்பாடலில் நெற்றி வியர்வை நிலத்தில் விழ விளைந்த பச்சை நெல்லின் வாசத்தை மாநகரத்தில் வாழ்ந்துகொண்டு நுகரமுடிகிறது.
‘வெள்ளை யானை’ என்ற படத்தின் தலைப்பில் உள்ள ‘ளை’, ‘னை’ ஆகிய உயிர்மெய் எழுத்துகள், பழைய பயன்பாட்டில் இருந்த எழுத்துரு முறையில் இருப்பது, தரணிக்கெல்லாம் சோறூட்டிய தஞ்சையின் நேற்றைய வாழ்வைச் சொல்கிறதா என்ற ஆவலை உருவாக்கியிருக்கிறது. படத்துக்கான எதிர்பார்ப்பையும் இந்த ஐந்து பாடல்கள் உருவாக்கியிருக்கின்றன.
தொடர்புக்கு:jesudoss.c@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT