Published : 16 May 2020 01:06 PM
Last Updated : 16 May 2020 01:06 PM
நான் எடுத்த போட்டோவை அஞ்சலி போட்டோவா போட வெச்சியே நண்பா என்று இயக்குநர் ரவிக்குமார் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கரிடம் 'ஐ' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து '4G' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்துக்காக தனது பெயரை வெங்கட் பக்கர் என்று மாற்றியிருந்தார். சி.வி.குமார் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் இசை என இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வந்தன.
ஊரடங்கு காரணமாக மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் அன்னூரில் இருந்தார் அருண். நேற்று (15.05.20) காலை தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் எதிர்ப்புறம் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'4G' படக்குழுவினர் மற்றும் இவரது இயக்குநர்கள் நண்பர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். அருணின் மரணம் தொடர்பாக 'இன்று நேற்று நாளை' மற்றும் 'அயலான்' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'நண்பா என்னை ஹீரோ மாதிரி எடுடா'ன்னு சொன்னியே. உன்னை அவ்ளோ ரசிச்சு நான் எடுத்த இந்த போட்டோவை உனக்கு அஞ்சலி போட்டோவா போட வெச்சியேடா நண்பா! டெய்லி எவ்ளோ பேசியிருப்போம். எத்தனை ஆசைகளைச் சொன்ன, உன்னோட கனவுகளை எல்லாம் காத்துல போயிடுச்சே அய்யோ. என் வெற்றிய உன்னோட வெற்றியா கொண்டாடுற உன் இடத்தை யார்டா நிரப்புவா. உங்க அம்மாவ என்ன சொல்லி தேத்துறது. போடா டேய்".
இவ்வாறு இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT