Last Updated : 14 May, 2020 07:18 AM

1  

Published : 14 May 2020 07:18 AM
Last Updated : 14 May 2020 07:18 AM

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘நேயர் விருப்பம்’ பாணியில் பாடல்கள் பாடி நிதி திரட்டும் சின்மயி: இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் உதவித் தொகை சேர்ந்துள்ளது

சென்னை

கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய பின்னணி பாடகி சின்மயி பாடல்கள் பாடி ரூ.30 லட்சம் வரைநிதி திரட்டியுள்ளார். இதனால் 1,100 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கால் திரைத்துறையினரும் எந்தப் பணிகளையும் செய்ய முடியாமல் வீட்டில்முடங்கியுள்ளனர். இந்நேரத்தில்வேலையில்லாமல் பாதிப்படைந்தபல குடும்பங்களுக்கு திரைத்துறை யினர் உதவி செய்து வருகின்றனர்.

அதன்படி பின்னணி பாடகி சின்மயி பாடல்களை பாடி நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனால், 1,100-க்கும் மேலான குடும்பங்கள் இதுவரை பயன்பெற்றுள்ளன. இதற்காக, கடந்த ஒரு மாதத்தில் 1,700-க்கும் அதிகமான பாடல்களை வீட்டில் இருந்தபடியே பாடி வீடியோ பதிவாக உருவாக்கியுள்ளார். ‘நேயர்விருப்பம்’ பாணியில் இந்த சேவைஇருப்பதாக சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டு குவிகின்றன. இதுதொடர்பாக பின்னணி பாடகி சின்மயி கூறியதாவது:

ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் வீட்டில் இருக்கிறோமே என சில பாடல்களை பாடி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடத் தொடங்கினேன். அதற்்குநிறைய பாராட்டுகள் குவிந்தன. ஒருகட்டத்தில் பலரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கூறி,அதைப் பாடுங்கள் என்று பதிவிடத்தொடங்கினர். அதற்கு நானோ,‘உங்களுக்கு பிடித்த பாடல்களைநான் பாடுகிறேன். அதற்கு பதிலாக இந்த பேரிடர் நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகஉதவி செய்ய நீங்கள் நிதி தரலாமே?’ என பதிவிட்டேன். அதற்கு பலரும் சம்மதித்தனர்.

அப்படி தொடங்கிய பாடல் பயணம்தான் இது. இதுவரை 1,100-க்கும் மேலான ஏழைக் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. மக்களுக்கு நேரடியாக கிட்டத்தட்ட ரூ.30 லட்சம்வரை நிதி உதவி சென்றுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படும் குடும்பங்களைக் கண்டுபிடித்து என் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர்களது விவரங்களைப் பதிவிடுகிறேன். உதவ முன் வருபவர்கள் நேரடியாகஅவர்களது வங்கிக்கணக்குக்கு நிதியை அளித்துவிட்டு அந்த ரசீதை என் மின்னஞ்சல் பக்கத்துக்குஅனுப்பினால் போதுமானது.

இந்தப் பணி மிகவும் திருப்தி யாக இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் சிரமப்பட்டு வரும் மீனவர்கள் குடும்பம், நாட்டுப்புற பாடகர்கள், மேடை நாடகக் கலைஞர்கள் குடும்பம் என பலரும் இதன் வழியே பயன் பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x