Published : 11 May 2020 03:08 PM
Last Updated : 11 May 2020 03:08 PM
52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு, சில படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கும்போதே, தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. மார்ச் 19-ம் தேதி பெப்சி அமைப்பு இதனை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரை, சின்னத்திரை என எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்டப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே முடங்கியது.
சில தினங்களுக்கு முன்பு தொழில்துறையினருக்கு மட்டும், நிபந்தனைகளுடன் தொழில் தொடங்க அனுமதியளித்தது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர்கள், தமிழக அரசுக்கு இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு மட்டும் அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைப் பரிசிலீத்த தமிழக அரசு, இன்று (மே 11) முதல் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது. ஆகையால் 52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு தமிழ் சினிமா பணிகள் இன்று (மே 11) முதல் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி என்ன படத்தின் பணிகள் எல்லாம் தொடங்கி நடைபெற்று வருகிறது என்று விசாரித்தோம். 'இந்தியன் 2' படத்தின் எடிட்டிங் பணிகள் 2 இடங்களில் நடைபெற்று வருகின்றன. விஷால் நடித்துள்ள 'சக்ரா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. 'ராங்கி' படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள், 'கபடதாரி' படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் சின்னத்திரை தொடர்களின் டப்பிங் பணிகள் ஆகியவை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் அனைத்துமே கரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியுடன் 5 நபர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள் என்று தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT