Published : 09 May 2020 09:42 PM
Last Updated : 09 May 2020 09:42 PM
என் படங்களில் உள்ள குரோசவாவின் தாக்கம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
'அசுரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் இந்திய அளவில் அறியப்படும் இயக்குநராக மாறியுள்ளார் வெற்றிமாறன். 2007-ம் ஆண்டு 'பொல்லாதவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'ஆடுகளம்', 'விசாரணை', 'வடசென்னை' மற்றும் 'அசுரன்' என இதுவரை 5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.
இவரது அனைத்து படங்களுமே விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டவை. தற்போது தனது படங்களில் இருக்கும் குரோசவாவின் தாக்கம் குறித்து வெற்றிமாறன் கூறியிருப்பதாவது:
"நான் 'ராஷோமோன்' திரைக்கதையை படித்த போது அப்படி ஒரு படத்தை எவ்வாறு எடுக்க முடியும் என்பது எனக்குப் புரிந்தது. யூகத்தை வைத்தே அந்தப் படம் இருக்கும். அந்தக் கதை எதையுமே உண்மை என்று சொல்லாது. அது உங்களை யூகிக்க வைக்கும். அந்த படைப்பாற்றலில் நீங்களும் பங்கெடுக்கிறீர்கள். குரோசவாவிடம் எனக்குப் பிடித்தது அவர் அவரது திரைக்கதைகளை எழுதும் முறை தான்.
எங்குமே கருப்பு வெள்ளையாக எதுவும் சொல்லப்பட்டிருக்காது. நிறைய இருண்ட பகுதிகள் இருக்கும். நாம் புறக்கணிக்கும் விஷயங்களை அவர் படத்தில் வைத்திருப்பார். அவர் படத்தை எப்போது பார்த்தாலும் அது என்னை உற்சாகப்படுத்தும். இன்னும் அதிகம் சிந்திக்க வைக்கும். நான் திரைக்கதை எழுதும்போது எங்காவது முடங்கிவிட்டால், குரோசவா எப்படி யோசிப்பார் என்று நினைப்பேன். மனிதர்களின் மனிதத் தன்மையைப் பற்றிய அவர் புரிந்து கொண்ட விதம் விசேஷமானது”
இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும் படங்களில் இருக்கும் கலாச்சாரம் குறித்து வெற்றிமாறன், "சினிமா என்று வரும்போது அது கலாச்சாரங்களைத் தாண்டி செல்ல வேண்டும். அதில் நீங்கள் உங்க காலகட்டம், உங்கள் வாழ்க்கை, பாரம்பரியம், வரலாற்றைப் பேச வேண்டும். அது எவ்வளவு தூரம் நம் இனத்தைப் பற்றிப் பேசுகிறது அவ்வளவு தூரம் அதற்கு சர்வதேச அளவில் வரவேற்பு இருக்கும். யார் ஒரு படத்தைப் பார்த்தாலும், அது எந்த மாதிரியான உலகத்திலிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். ஒரு இயக்குநர் என்பவன் விருப்பமில்லாத வரலாற்று ஆசிரியன் அல்லது தற்செயலான வரலாற்றாசிரியன்" எனக் குறிப்பிட்டுள்ளார் வெற்றிமாறன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT