Published : 07 May 2020 08:48 PM
Last Updated : 07 May 2020 08:48 PM
படப்பிடிப்பில் எப்போதுமே பாலுமகேந்திரா இருப்பதாக உணர்வேன் என்று இயக்குநர் வெற்றிமாறன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்தனர். இவர்களில் பலரும் பாலுமகேந்திரா உடனான நினைவுகள் தொடர்பாகப் பகிர்ந்து வருகிறார்கள்.
தற்போது 'தி இந்து' ஆங்கிலத்தின் இன்ஸ்டாகிராம் பக்க நேரலையில் வெற்றிமாறன் பேட்டியளித்தார். அப்போது தனக்கும் பாலுமகேந்திராவுக்கும் உடனான குரு - சிஷ்யன் உறவு குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பதாவது:
"பாலுமகேந்திராவுடனான எனது உறவு மிகவும் தனிப்பட்ட ஒன்று. அவரிடம் வேலை செய்ய ஆரம்பித்த 6 மாதங்களில் என் அப்பா காலமானார். அப்போதுதான் பாலுமகேந்திராவின் மகனும் சுயமாகப் பணியாற்ற ஆரம்பித்திருந்தார். வீட்டில் இருக்கமாட்டார். அந்தக் காலகட்டத்தில், அவரது உதவியாளர்கள் யாருமே அவர் படிக்கும் புத்தகங்களைப் படித்திருக்கவில்லை.
திரைப்படம் பார்த்த பிறகு சில விஷயங்கள் குறித்துப் பேசத் தெரியவில்லை. அதற்கு மொழி ஒரு தடையாக இருந்தது. அந்த வகையில், என்னால் அவருடன் நன்றாக ஒத்துப்போக முடிந்தது. அவர் 'ஆடுகளம்' பார்த்துவிட்டு என்னிடம், 'எனது உதவி இயக்குநர்களிலேயே உன்னால் மட்டும் தான் சர்வதேச அரங்குக்குப் போக முடியும். ஏனென்றால் உனக்கு அதற்கான தொடர்புத் திறன் இருக்கிறது' என்றார். சர்வதேச அளவில் ஒரு திரைப்படம் சேர வேண்டுமென்றால் அது சொல்லும் விஷயம், அதன் தொடர்பு (communication) மிக மிக முக்கியம் என்று அவர் நினைத்தார்.
அவர் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். நான் இன்றும் அவரது உதவி இயக்குநர் என்றே என்னை நினைக்கிறேன். என் படப்பிடிப்பில் எப்போதும் அவர் இருப்பதாக உணர்வேன். ஒரு நல்ல ஷாட் எடுத்த பிறகு, சாருக்கு இது பிடிக்கும் என எல்லோரிடமும் சொல்வேன். நான் மட்டுமல்ல, அவரது உதவியாளர்கள் அனைவருமே இப்படி உணர்வோம். அவருடன் 6 மாதங்கள் பேசினால் போதும். அவரைப் பற்றி வாழ்க்கை முழுவதும் பேசுவீர்கள்".
இவ்வாறு இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT