Published : 07 May 2020 07:32 PM
Last Updated : 07 May 2020 07:32 PM
தனிப்பட்ட வாழ்க்கை மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எடுத்துக்கொண்ட விதம் குறித்து கமல் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.
இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்களின் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மீதும், விமர்சனங்களை வைத்துக்கொண்ட விதம் குறித்து கமல் பேசியுள்ளார்.
அந்தப் பகுதி:
அபிஷேக்: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மீதும், உங்கள் சினிமா மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
கமல்: முன்னால் எளிதாக இல்லை. அடிக்கப் போயிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் அர்த்தமற்றது. அப்போது எனக்கு 19-20 வயது. நல்லவேளையாக நான் ஆரம்பத்திலேயே அதெல்லாம் செய்து முடித்துவிட்டேன். அதனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு அசட்டுத்தனம் செய்ய வாய்ப்பில்லை. மேலும், என்னைக் கட்டுப்படுத்த என்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தனர். ஆர்.சி.சக்தி என்னைவிடக் கோபக்காரர்.
நான் கோபப்படப் போகிறேன் என்று தெரிந்தால் என்னை விட அதிகமாகக் கோபப்பட்டு விடுவார். அவரைக் கட்டுப்படுத்த வேண்டியதாகிவிடும். என்னைப் பற்றிய விமர்சனம் வந்தால் முதலில் நான் அருவா எடுத்து ஓடுகிறேன் என்பார். என் கோபத்தை அவர்கள் காட்டுவதால் என் கோபம் தணிந்துவிடும்.
சில பேர் வைக்கும் விமர்சனங்கள் அற்புதமான பாடமாக இருக்கும். அந்த விமர்சனத்தில் கிண்டல் இருக்காது. கரிசனத்துடன் இருக்கும். பத்திரிகையாளர்களே கூட அப்படி விமர்சனம் வைப்பார்கள். இவ்வளவு நல்ல நடிகர் இதுபோன்ற படத்தில் நடிக்கக் கூடாது என்று சொல்வதில் ஒரு பாராட்டு இருக்கிறது. அப்படி இல்லாமல் தன்னைப் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும், பேனாவில் கொட்டும் விமர்சனங்களும் வரும். அதற்குச் சிறந்த பதிலே பதில் சொல்லாமல் இருப்பதுதான். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு ஒரு கோபம் வருமே, அதைப் பார்க்கும்போது நமக்குச் சந்தோஷமாக இருக்கும். அவர்களுக்குப் பதில் நமது அடுத்த முயற்சிதான்.
தனிப்பட்ட வாழ்க்கை மீது விமர்சனம் வைப்பது பற்றி மரியாதையாகக் கேட்க வேண்டுமென்றால், 'அவன் யார் சொல்றதுக்கு?' அது என் வாழ்க்கை. அந்த விமர்சனங்களையெல்லாம் வைத்து யோசிக்க முடியாது. எனக்குச் சொல்லப்பட்ட வாழ்வு முறைகளிலிருந்து மாறுபடுகிறோமே, இது தவறில்லையா? இதனால் யாருக்கு என்ன நஷ்டம், என்ன லாபம்? எனக்கென்ன சந்தோஷம், இதுபற்றியெல்லாம் யோசிக்காமல் எதையும் செய்திருக்க மாட்டேன்.
நாளை கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும்போது எனக்குப் பிடிக்க வேண்டுமென்றால் என் நேர்மை எனக்குப் புரிய வேண்டும். அப்படித்தான் நான் அனைத்து முடிவுகளையும் எடுத்திருக்கிறேன். அவை வித்தியாசமாக இருந்திருக்கலாம். என்னுடைய பகுத்தறிவு பற்றியே ஏன் வெளியே சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அதன் மூலமாக அன்பு கிடைத்தது.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT