Published : 05 May 2020 07:03 PM
Last Updated : 05 May 2020 07:03 PM
என்னைச் செதுக்கியது பாலசந்தரும், மலையாள சினிமாவும்தான் என்று கமல் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.
இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில்தான் விமர்சனங்களை எடுத்துக் கொண்ட விதம் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார் கமல்.
அந்தப் பகுதி:
விஜய் சேதுபதி: அன்றைக்கு நீங்கள் எடுத்த படங்களின் விவரம் இன்று எங்களுக்குப் புரிகிறது. ஆனால், அன்று விமர்சனங்கள் வைக்கப்படும்போது எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
கமல்: எந்த விமர்சனங்களையும் நான் மதித்ததே இல்லை. காதல் என்று வந்த பிறகு விமர்சனம் பற்றிய கவலை எதற்கு. அப்பா அம்மா என்று யார் சொன்னாலும் எடுபடாது. காதல் காதல்தான். வீட்டை விட்டு ஓடிப்போவேன் என்று மிரட்டுவது போலத்தான்.
அனந்து சாரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். "எனக்கு சினிமா வேண்டாம், நான் தொழில்நுட்பக் கலைஞராக ஆக வேண்டும் என்று தானே நினைத்தேன். என்னை பாலசந்தர் நடிகனாக்கிவிட்டார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளட்டா" என்று கூட கேட்டிருக்கிறேன்.
"அட, உனக்கு என்ன வேண்டும்" என்று அனந்து கேட்டார்.
"வித்தியாசமாக நடிக்க வேண்டும். இங்கு பாலசந்தரைத் தவிர யாருமே வித்தியாசமாகப் படம் எடுப்பதில்லையே. பணம் சம்பாதிக்க நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பசி பட்டினிக்காக நான் வேலைக்கு வரவில்லையே" என்று வருத்தப்பட்டேன்.
அதற்கு அவர், மலையாளப் படங்களில் நடிக்கிறாயே, அதைத் தொடர்ந்து செய் என்றார். உடனே அப்படியே நான் அந்தப் பக்கம் திரும்பிவிட்டேன். கேரளா சென்றால் மலையாளப் படங்களுக்கு நன்றி சொல்வேன். இங்கு வந்தால் தமிழ்ப் படங்களுக்கு நன்றி சொல்வேன் என்று சிலர் நினைப்பார்கள். என்னைச் செதுக்கியதில் பாலசந்தருக்கும், மலையாள சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அங்குதான் எல்லா பரிசோதனைகளுக்கும் அனுமதி உண்டு. மக்கள் கொடுத்த அனுமதி அது. அதை நம்பித் தேடிப் போகக் கூடிய கலைஞர்களும் இருந்தனர்.
கேரள மக்களுக்கான கலை மையம் என்று ஒன்று அங்கிருந்தது. அது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் நின்று நகைச்சுவை சொல்லும் நாடகங்களாகவே எல்லாம் மாறிவிட்டது. பாலசந்தரோட அழுத்தமான நாடகங்கள் என்பது முடிந்துவிட்டது. சோ போட்ட நாடகங்கள் கூட நகைச்சுவை சார்ந்தே இருந்தது. எனவே ஒரு தேடல் என்னிடம் இருந்தது.
அந்தத் தேடலை உங்களிடமும் பார்க்கிறேன். நீங்கள் செய்த கதாபாத்திரங்கள் போல அந்தக் காலத்தில் செய்ய விட மாட்டார்கள். அப்படி நடித்தால் தொடர்ந்து அப்படியே நடிக்க வேண்டியதுதான். வேறு நடிக்க முடியாது. நான் அந்தக் காலத்தில் என்னால் முடிந்த வித்தியாசத்தைச் செய்தேன். நீங்கள் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும்.
எம்ஜிஆரிடம் ஒரு முறை பேசும்போது சொன்னேன், "நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள், உங்களுக்கு நேரமிருக்காது. ஆனால் எனது நல்லப் படம் வரும்போது சொல்கிறேன். வந்து பார்க்க வேண்டும்" என்று சொன்னேன்.
அதற்கு உடனே அவர், "ஓ அப்போது நன்றாக இல்லாத படங்களிலும் நடிக்கிறாயா" என்று கேட்டார்.
"நீங்கள் கொடுத்த வெற்றியைப் பார்த்து எது வெற்றி பெறும் என்று பார்த்துச் செய்ய வேண்டியதாக இருக்கிறது" என்றேன்.
"நான் வந்த படிகளிலேயே ஏன் ஏறுகிறாய். நான் வர வேண்டும் என்றுதான் அந்தப் படிகளைக் கட்டினேன். அந்தப் படிகள் இருக்கிறதே. நீ அடுத்த படிக்குப் போ" என்று அவர் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
நீங்கள் அப்போதே செய்துவிட்டீர்களே என்று என்னைச் சொல்லும்போது எனக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் அடுத்த தலைமுறை. நீங்கள் ஏற்கெனவே அந்தப் பாதையில்தான் இருக்கிறீர்கள். அதை இன்னும் கூட தைரியமாக உந்தித் தள்ளுங்கள். நாங்கள் உங்களுக்காக விசிலடிக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT