Published : 04 May 2020 09:26 PM
Last Updated : 04 May 2020 09:26 PM
புகழை மட்டும் தேடி அலையாமல் துணிச்சலாக படங்களில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதியை பாராட்டிச் சொன்னார் கமல்
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.
இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். மேலும், விஜய் சேதுபதியின் படங்கள் தேர்வு குறித்து புகழ்ந்து பேசினார் கமல்.
அந்தப் பகுதி:
விஜய் சேதுபதி நேரலையில் இணைந்தவுடன் ’எப்படி இருக்கிறீர்கள்’ என்ற நலம் விசாரிப்பு முடிந்தவுடன் "நீங்கள் கற்ற விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்று நீங்கள் என்னிடம் ஒரு முறை கேட்டீர்கள். ஆழமான கேள்வியாக இருக்கிறதே என்று அது பற்றி நான் யோசித்தேன். பதில் கிடைத்தது. அதற்கான பதில் நீங்களே தான். என் திரைப்படங்களைக் காட்டி உங்கள் மகனுக்கு சொல்லித் தருகிறீர்கள் இல்லையா, அப்படித்தான் என் குருமார்களும் வெவ்வேறு நடிகர்களைக் காட்டி எனக்குச் சொல்லித் தந்தார்கள்" என்று கூறினார் கமல்.
அதனைத் தொடர்ந்து கமல் கூறியதாவது:
"எல்லா நடிகர்களுக்கும் இருக்கு ஒரு கேள்வி, எனக்கும் இருந்தது. சண்முகம் அண்ணாச்சி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது பிரமாதமாக ஒத்திகை பார்ப்போம். 10 நாட்கள் முழு நாடகத்தையும் அனைவரும் மனப்பாடம் செய்த பிறகு தான் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்பது சொல்லப்படும். அதை வைத்து மீண்டும் உட்கார்ந்து எங்கள் வசனங்களை மனப்பாடம் செய்வோம். அதன் பின் தான் எழுந்து நின்று நடிக்க ஒத்திகை செய்யப்படும். அப்போது நான் 'இந்த கையை எங்கே வைத்துக் கொள்வது ஐயா' என்று கேட்டேன்.
அதற்கு அவர் 'அந்தக் கேள்வியைக் கேட்க நிறுத்திவிட்டாய் என்றால் நீ நடிகனாகிவிட்டாய் என்று அர்த்தம். அதைப் பற்றிய நினைப்பே வரக்கூடாது. நீ பேசும்போது கை எப்படி இருக்கிறது என்று யோசிக்கிறாயா? இல்லையே, அப்படி எளிதாக வர வேண்டும். அது தெரியாத வரைக்கும் கையில் மாமிசத் துண்டுகளை வைத்து நடப்பது போல இருப்பாய்' என்றார்.
'அப்படியென்றால் கைகளை நன்றாக ஆட்டிப் பேச வேண்டுமா ஐயா' என்று கேட்டபோது விகே ராமசுவாமியை உதாரணமாகச் சொன்னார். அவர் கைகளை நகர்த்தவே மாட்டார் தெரியுமா என்று சொன்னார். நான் ஒரு நட்சத்திரமான பிறகு விகே ராமசுவாமியிடம் இது பற்றிக் கேட்டேன், அதற்கு அவர், "அப்படியா சொன்னார், நானே கவனித்ததில்லையே" என்றார்.
"நான் பெரிய நடிகனில்லை, எதற்குக் கையையெல்லாம் ஆட்டி நடிக்க வேண்டும், நமக்கு வரும் வசனத்தைப் பேசி நடித்துவிட்டுப் போவோமே என்று தான் அப்படி நடிக்கிறேன். அதுவே ஒரு பாணியாகிவிட்டது போல" என்று சொன்னார். இப்படி சின்னச் சின்ன பாடங்கள், நாகேஷ், எம்.ஆர்.ராதா என கற்றுக்கொண்டேன். இன்று உங்களைப் பார்த்துப் படிக்க நிறையப் பேர் இருப்பார்கள்.
எனக்கு உங்களிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், வெறும் புகழை மட்டும் தேடி அலையாமல் துணிச்சலாக நீங்கள் வித்தியாசமாக நடிப்பதுதான். புகழ் தகுதியிருப்பவர்களுக்குத் தானாக வரும். ஆனால் நீங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேடுவது பெரிது. அந்தத் தேடல் வீண் போகாது"
இவ்வாறு கமல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT