Published : 02 May 2020 03:32 PM
Last Updated : 02 May 2020 03:32 PM

'ஹே ராம்' படமே பெரிய ரிஸ்க்; அந்த தைரியம் எப்படி வந்தது? - விஜய் சேதுபதி கேள்விக்கு கமல் பதில்

'ஹே ராம்' படமே பெரிய ரிஸ்க். அந்த தைரியம் எப்படி வந்தது? என்று விஜய் சேதுபதி எழுப்பிய கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை மூன்றாவது முறையாக ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இதனால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. படப்பிடிப்புகள் எதுவுமே இல்லை என்பதால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இதில் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்துகொண்டே தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலை பேட்டியாக கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது.

இதில் விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். அதில் ஒரு பகுதி:

கமல்: 'விருமாண்டி' படத்துக்கு முன்பாகவே 'ஹே ராம்' படமே நேரடி ஒலிக்கலவைதான். அதை இங்கே பதிவு பண்ண விரும்புகிறேன். புதிய விஷயங்களுக்கு முயலும்போது உடன் இருப்பவர்களே தடை போடுவார்கள், திட்டுவார்கள், அழுவார்கள். ஆனால், நாம் அதை எல்லாம் கடந்துதான் போக வேண்டும்.

விஜய் சேதுபதி: 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடிக்கும் போது நாசர் சார், " 'ஹே ராம்' படம் முடித்தவுடன் கமல் சார் கையில் பணமே கிடையாது" என்று சொன்னார். அந்தச் சமயத்தில் அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கும் தைரியம் எப்படி வந்தது? இங்கு அடிப்படையாகப் பாதுகாப்பாக வாழ வேண்டும், பணம் முக்கியம் என்று பயமுறுத்துகிறார்களே?

கமல்: தியாகராஜ பாகவதருக்கு கண் தெரியாமல் ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருந்தார். அங்கு யாருமே இல்லை என்று என்னிடம் சொல்லும் போது 18 வயதிருக்கும். ஆகையால் ஜாக்கிரதையாக இருக்கணும்பா என்று சொல்வார்கள். அப்போது ரயில் நிலையத்தில் யாருமே இல்லாமல் உட்கார்ந்து பழகிவிட்டேன் என்றேன். நானும், சக்தி அண்ணனும் இவ்வளவு ரூபாய் இருந்தால் போதாதா என்று இரவு படுக்கையில் பேசிக் கொண்டிருப்போம்.

'ஹே ராம்' படம் பார்த்துவிட்டு என் நண்பர் ஒருவர் கண்கலங்க "என்னங்க இது, இவ்வளவு பணம் செலவு பண்ணி எனக்கு பயமாக இருக்கே" என்றார். எனக்குப் பயமாக இல்லை என்றேன். "எதற்காக இந்தப் படம் பண்ணினீர்கள்" என்று கேட்டார். நானும், சக்தி அண்ணனும் பேசும்போது, பணம் வந்தால் இப்படியொரு படம் பண்ணுவேன் என்று பேசினோம். அதனால் பண்ணினேன் என்றேன். நானும், சக்தி அண்ணனும் பேசும்போது என்ன உயரத்தில் இருந்தேனோ அதே உயரத்தில் தான் இருக்கிறேன். அதே பசிதான் இருக்கிறது.

விஜய் சேதுபதி: ஒரு அடிப்படை வாழ்க்கை, அதற்குப் பணம் என்றும் வரும்போது பயம் வரும் அல்லவா சார். அதைத் தாண்டி எப்படி? அது என்னையும் நோண்டுகிறது. அதனால் கேட்கிறேன்

கமல்: நீங்களே நோண்டி நீங்கள் பதில் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்லும் பதிலைப் பின்பற்றினால் உங்கள் மனைவி, குழந்தைகள் என்னைத் திட்டுவார்கள். 60 வயது வரைக்கும் என்னுடைய நண்பர்கள் பலரும் கமல் வசதியாக இருக்கான்டா என்று சொல்லும் அளவுக்கு வைத்துவிட்டார்கள். இதற்கு மேல் ஆசைப்படுவது தவறு. இதற்கு மேல் வருவது அனைத்துமே போனஸ்தான். இதற்கு மேல் நான் என்ன பண்ணினாலும் சரிதான். ஏனென்றால் நான் ஒரு சீனியர் சிட்டிசன். நான் சொல்வதைக் கேளுங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x