Published : 22 Apr 2020 09:54 PM
Last Updated : 22 Apr 2020 09:54 PM
நடிகர் தீப்பெட்டி கணேசனின் 2 குழந்தைகளின் இந்தாண்டு படிப்புச் செலவினை முழுமையாக ஏற்றுள்ளார் பாடலாசிரியரும், நடிகருமான சினேகன்.
'ரேணிகுண்டா', 'பில்லா 2', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இந்த ஊரடங்கிற்கு முன்பே பட வாய்ப்புகள் குறைந்ததால் கடும் சிரமத்தில் தான் இருந்தார். அவ்வப்போது கிடைக்கும் சினிமா வாய்ப்புகளை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த கரோனா ஊரடங்கில் கடும் சிரமத்துக்கு ஆளானார். இவருடைய நிலைமையை அறிந்து, நடிகர் சங்கத்தின் விஷால் தரப்பு அவருக்கு அரசி, மளிகைப் பொருட்கள் வழங்கி உதவி செய்தது. இதனைத் தொடர்ந்து தனியார் யூடியூப் சேனலுக்கு, தன்னுடைய நிலைமையை விளக்கி பேட்டி ஒன்றை அளித்தார். தீப்பெட்டி கணேசன்.
இந்த வீடியோ பேட்டி இணையத்தில் பெரும் வைரலானது. இதில் அஜித், லாரன்ஸ் போன்றவர்கள் தனக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதைப் பார்த்த லாரன்ஸ் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். மேலும், இந்த வீடியோவினை அஜித்தின் பார்வைக்குக் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்திருந்தார்.
தற்போது தீப்பெட்டி கணேசன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவி செய்துள்ளார் பாடலாசிரியரும், நடிகருமான சினேகன். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"தன் குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட வசதியில்லை என கண்ணீர் மல்க ஒரு பதிவினை வலைத்தளத்தில் நடிகர் தீப்பெட்டி கணேசன் மனம் உருக பதிவிட்டு இருந்தார். அவரை இன்று சந்தித்து எனது 'சினேகம் செயலகம்' என்ற அறக்கட்டளையின் சார்பில் இரண்டு வாரத்திற்கான அனைத்து உணவுப்பொருட்களை வழங்கியதோடு அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச்செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையைத் தந்துவிட்டு வந்தேன். இது போல பல கலைஞர்களுக்கு பல உதவிகள் இந்த தருணத்தில் தேவைப்படுகிறது. மனம் உள்ளவர்களும் பணம் உள்ளவர்களும் உதவ முன்வாருங்கள்"
இவ்வாறு சினேகன் தெரிவித்துள்ளார்.
கலைஞர்ளைக் காப்பதும் நமது பொறுப்பு pic.twitter.com/HnuQb02Lcm
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT