Published : 20 Apr 2020 05:52 PM
Last Updated : 20 Apr 2020 05:52 PM

தொடர்ச்சியாகப் பணிபுரிவோருக்கு நன்றிப் பாடல்: எஸ்.பி.பி - வைரமுத்து வெளியீடு

கரோனா ஊரடங்கில் தொடர்ச்சியாகப் பணிபுரிவோருக்கு நன்றி தெரிவித்து எஸ்.பி.பி.யும் வைரமுத்துவும் இணைந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்பதால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். காவல்துறையினர், மருத்துவத் துறையினர், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மட்டும் ஓய்வின்றி இந்த கரோனா அச்சுறுத்தலிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களை இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது இவர்களுக்காக வைரமுத்து ஒரு பாடலை எழுத, அதுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

அந்தப் பாடல் வரிகள் பின்வருமாறு:

உழைக்கும் கடவுள்களே
உங்களுக்கெல்லாம் நன்றி!
அழைக்கும் வேளையிலே – எங்கள்
ஆரூயிர் காப்பீரே – உங்கள்
அத்தனை பேர்க்கும் நன்றி!

இதயத்திலிருந்து
சொற்கள் எடுத்து
எடுத்த சொற்களைத்
தேனில் நனைத்து...
வாரி வழங்குகின்றோம் – உம்மை
வணங்கி மகிழுகின்றோம்!

மண்ணுயிர் காக்கத் தன்னுயிர் மறக்கும்
மானுடக் கடவுள் மருத்துவர்கள்!

தேவை அறிந்து சேவை புரியும்
தேவதை மார்கள் செவிலியர்கள்!
பயிரைக் காக்கும் வேர்கள் போல
உயிரைக் காக்கும் ஊழியர்கள்!

வெயிலைத் தாங்கும் விருட்சம் போல
வீதியில் நிற்கும் காவலர்கள்!

தூய்மைப் பணியில் வேர்வை வழியத்
தொண்டு நடத்தும் ஏவலர்கள்!

வணக்கமய்யா வணக்கம் – எங்கள்
வாழ்க்கை உங்களால் நடக்கும் – உங்கள்
தேசத் தொண்டை வாழ்த்திக் கொண்டே
தேசியக் கொடியும் பறக்கும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x