Published : 17 Apr 2020 01:01 PM
Last Updated : 17 Apr 2020 01:01 PM
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று தனி அலுவலரும் தேர்தல் அதிகாரியும் இணைந்து அறிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவியேற்று இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.
கரோனா அச்சுறுத்தலால் இந்தத் தேர்தல் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 21-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 09.05.2020 காலை 10 மணி முதல் சங்க அலுவலகத்தில் அலுவலக வேலை நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 வரை வரை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். (Black & white address book Rs. 500/-, colour address book Rs. 2000/-)
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற ஜூன் 21-ம் தேதி (21.06.2020) நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணை உறுப்பினர்கள் கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் அட்டவணை
1. 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020 மாலை 5 மணி வரை வேட்புமனுத் தாக்கலுகான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். (ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்).
2. 14.05.2020 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது.
3. 15.05.2020 காலை 10 மணி முதல் 19.05.2020 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும். (விண்ணப்பப் படிவங்களை தபால் அல்லது courier-ல் அனுப்பும் உறுப்பினர்கள் 19.05.2020 மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்திற்குக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது)
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் உள்ள மூடி முத்திரையிட்ட பெட்டியில் 19.05.2020 மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்படும்.
5. 20.05.2020 காலை 10 மணி முதல் 24.05.2020 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல் விண்ணப்பங்களைத் திரும்பப் பெற இயலாது.
6. 24.05.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
25.05.2020 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 21.06.2020 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பின்னர் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் விசாரிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் பின்வருமாறு....
தலைவர் பதவிக்கு - ரூ.1,00,000/- (ரூ.ஒரு லட்சம்)
மற்ற நிர்வாகிகள் பதவிக்கு - ரூ.50,000/- (ரூ.ஐம்பதாயிரம்)
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு - ரூ.10,000/- (ரூ.பத்தாயிரம்)".
இவ்வாறு தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT