Published : 15 Apr 2020 06:34 PM
Last Updated : 15 Apr 2020 06:34 PM

நிவாரணப் பொருட்கள் மீது என் படம் வேண்டாம்; பெறுபவர்களையும் படம் எடுக்காதீர்கள்: கமல் வேண்டுகோள்

நிவாரண உதவி செய்து வரும் மக்கள் நீதி மய்யத்தினருக்கு கமல் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் என பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யக் கட்சியினரும் பல்வேறு மாவட்டங்களில் உதவிகள் செய்து வந்தனர். அவ்வாறு செய்யும் உதவிகள் குறித்து கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்‌, “நாங்கள்‌ இருக்கிறோம்‌ உதவிட” என முன்வந்து, எளிய மக்கள்‌ இந்த ஊரடங்கில்‌ பாதிக்கப்படாமல்‌ காத்திடக் கட்சி பேதமின்றி, நாம்‌ பணி செய்ய வேண்டும்‌ என்கின்ற என்‌ குரலுக்குச் செவி சாய்த்து, தமிழகமெங்கும்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ அரசுடன்‌ இணைந்தும்‌, தனியாகவும்‌ அயராது களப்பணியாற்றிக்‌ கொண்டிருக்கும்‌ மக்கள்‌ நீதி மய்யத்தினர்‌ அனைவருக்கும்‌ வணக்கம்‌.

ஊரடங்கு, தொற்று நோய்‌ ஒரு பக்கம்‌, தொழில்‌ என்னவாகும்‌, வேலை நிலை, சம்பளம்‌ வருமா, அரசு நமக்கு உதவி செய்யுமா என்ற ஏகப்பட்ட கேள்விகள்‌ மனதிலிருந்தும்‌, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல்‌ நாளிலிருந்தே களத்தில்‌ இறங்கியிருக்கும்‌ உண்மையான மனிதத்தின்‌ முகங்கள்‌ நீங்கள்‌.

ஏழை, எளிய மக்களுக்கு உணவுப்பொருட்கள்‌ தருவது, சாலையோரம்‌ வசிப்போருக்கு உணவு வழங்குவது, நியாயவிலைக் கடைகளில்‌ சமூக விலகியிருத்தலை மக்களுக்கு அறிவுறுத்தி, அவர்களை நெறிப்படுத்துவது, தூய்மைப் பணியாளர்கள்‌, காவல்‌ துறை ஊழியர்கள்‌ ஆகியோருக்கு உதவுவது என ஒவ்வொருவரும்‌ ஒவ்வொரு பணியைச் செய்து வருகிறீர்கள்‌.

தனது கல்யாண மண்டபத்தை மாநகராட்சிக்குக் கொடுத்த நிர்வாகியையும்‌, ஒவ்வொரு நாளும்‌ 10 கிலோ அரிசியை உதவியாகத் தரும்‌ நிர்வாகியையும்‌ எனக்குத்‌ தெரியும்‌. அவர்களில்‌ பலரிடம்‌ பேசியும்‌ இருக்கிறேன்‌.

மக்கள்‌ நீதி மய்யம்‌ என்ன செய்தது எனக்‌ கேட்கும்‌ சிலரின்‌ வெற்று வாதத்துக்கு மக்கள்‌ பதிலுரைப்பர்‌. உங்களின்‌ நேரத்தையோ, நோக்கத்தையோ அவர்கள்‌ பக்கம்‌ திசை திரும்ப விடாதீர்கள்‌. நமது பணி, மக்களுக்கு மட்டும்‌தான்‌.

உதவி செய்யும்‌ போது ஊடகங்களை அழைத்துச்‌ சென்று விளம்பரப்படுத்துவதையோ, அல்லது உணவுப்‌ பொருட்களின்‌ மேல்‌ சின்னத்தையோ, தலைவர்‌ படத்தை ஒட்டி விளம்பரப்படுத்துவதையோ மக்கள்‌ நீதி மய்யம்‌ செய்யாது. அது நம்‌ அரசியல்‌ அல்ல என்பதை நான்‌ ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்‌.

இந்த நேரத்தில்‌ உங்களிடம்‌ இன்னொரு கோரிக்கையையும்‌ வைக்க விரும்புகிறேன்‌. நீங்கள்‌ உதவி வழங்கச்‌ செல்லும்‌ இடங்களில்‌, உதவிப்‌ பொருட்களுடன்‌ நீங்கள்‌ இருக்கும்‌ புகைப்படத்தை மட்டும்‌ பதிவு செய்யுங்கள்‌. உங்களிடம்‌ உதவி பெறுபவருடன்‌ புகைப்படம்‌ எடுப்பதைத்‌ தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்‌. வாழ்வாதாரம்‌ நசித்துப்‌ போய்‌, உள்ளம்‌ வெம்பி இருக்கும்‌ எளிய மக்களை இந்தப் புகைப்படம்‌ எடுக்கும்‌ படலம்‌ காயப்படுத்தி விடலாம்‌.

உணவளித்து, உதவும்‌ நோக்கில்‌ அவர்கள்‌ சுயமரியாதையைப் பாதித்து, உள்ளத்தைப் புண்ணாக்கும்‌ செயல்‌ நமதாக இருக்க வேண்டாம்‌.கரம்‌ கோப்போம்‌ உதவிட, உயிர்‌ காப்போம்‌, உள்ளத்தையும்‌, தன்மானத்தையும்‌, காயப்படுத்தாமல்‌.

பொருளாதாரப் பாதிப்பு ஒரு பக்கம்‌, வேலை, தொழில்‌, வாழ்வாதார பயம்‌, இன்னொரு பக்கம்‌, என உலகம்‌ முழுவதும்‌ ஸ்திரத்தன்மை இன்றி இருக்கப்‌ போகும்‌ நேரத்தில்‌, சக மனிதன்‌ மீதான அன்பே நம்மை இணைக்கப்‌ போகிறது. அன்பு கொண்டு, நம்பிக்கையுடன்‌ முன்னேறுவோம்‌".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x