Published : 05 Apr 2020 06:53 PM
Last Updated : 05 Apr 2020 06:53 PM

கேள்விகள் கேட்க எதிர்ப்பு தெரிவிக்க இது நேரமல்ல: வரலட்சுமி

கேள்விகள் கேட்க எதிர்ப்பு தெரிவிக்க இது நேரமல்ல என்று வரலட்சுமி வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோவில் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி ஏப்ரல் 3-ம் தேதி காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார்.

அப்போது, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது நடிகை வரலட்சுமியும் ஆதரவு தெரிவித்து ட்விட்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அனைவருக்கும் வணக்கம், ஒரு பிரச்சினையைக் கண்டுபிடிப்பது அனைவருக்குமே எளிது. அதற்கான தீர்வை கண்டுபிடிப்பது தான் கஷ்டம். இந்தியா மாதிரியான நாட்டில் 134 கோடி மக்களைப் பாதுகாக்க ஒரே ஒருவர் தான் இருக்கிறார். அவர் நமது பிரதமர் மோடி ஜி தான். கேள்விகள் கேட்கலாம், எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் இப்போது அதற்கான நேரமல்ல. அதற்கான நேரம் வரும்.

இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றாக இணைவோம். ஏனென்றால், அனைவருமே ஒன்றிணைந்து தான் கரோனா வைரஸுக்கு எதிராக சண்டையிட முடியும். அது போல் இது வந்து ஜாதி, மதம் எல்லாம் பார்த்து இந்த கரோனா வைரஸ் வராது. எல்லாருக்குமே இந்த வைரஸ் தொற்று வரலாம். ஆகையால் அனைவரும் ஒன்றிணைந்து இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்துவிட்டு ஒளியேற்றுங்கள். இது ஒட்டுமொத்த இந்தியாவே ஒன்றிணைந்திருக்கிறோம் என்பதற்காக மட்டுமே.

அதே போல், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் கேள்வி கேட்பதற்கும் நேரம் வரும். ஆனால், இது அந்த நேரமல்ல. இந்த தருணத்தில் பிரதமருடன் கைகோர்ப்போம். நான் அவருடன் கைகோர்த்துள்ளேன். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்துக்கும் நன்றி சார். உங்களுடைய பணி மிகவும் கடுமையானது என்று தெரியும், நான் இன்று இரவு 9 மணியளவில் எனது கையில் விளக்குடன் பால்கனியில் நிற்பேன். நீங்களும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்"

இவ்வாறு வரலட்சுமி தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x