Published : 21 Aug 2015 10:58 AM
Last Updated : 21 Aug 2015 10:58 AM
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் குஷ்பு. ஜீ தமிழ் சேனலில் நாளை முதல் ஒளி பரப்பாகவுள்ள ‘சிம்ப்ளி குஷ்பு’ என்ற புதிய நிகழ்ச்சியை அவர் தயாரித்து வழங்குகிறார். அதற்கான வேலையில் பரபரப்பாக இருந்த அவரைச் சந்தித்தோம்.
அது என்ன ‘சிம்ப்ளி குஷ்பு’?
சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறேன். நான் தொடங்கும் நிகழ்ச்சி யில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். பிரபலங் களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை வெறும் உரையாடலாக மட்டுமல்லாமல் ரகசியங் கள், சுவாரஸ்யங்கள், விளையாட்டு என்று பல விஷயங்களைக் கலந்து கொடுக்க வுள்ளோம். குறிப்பாக இதில் ரசிகர்களின் பங்களிப்பும் இருக்கும். எளிமையாக அதே சமயம் பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளோடு இணைவதால் இந்த நிகழ்ச்சிக்கு ‘சிம்ப்ளி குஷ்பு’ என்ற பெயரை தேர்வு செய்தோம்.
அரசியல், திரைப்பட தயாரிப்பு, தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் நிர்வாகம், குடும்பம், குழந்தைகள் என்று எப்படி உங்களை பரபரப்பாக வைத்துக்கொள்ள முடிகிறது?
சிரமமான விஷயம்தான். ஆனால் எல்லாவற்றையும் கடந்து ஈடுபாடு என்ற ஒரு உணர்வு இருக்கிறதே. ஒவ்வொரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டுடன் தொடும்போது எல்லாமும் சாத்தியமாகும்.
சின்னத்திரையில் முகம் காட்ட ஆர்வம் செலுத்தும் நீங்கள் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன்?
நான் திரைப்படங்களில் நடித்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதே நேரத்தில் ஆர்வம் செலுத்தவைக்கும் வாய்ப்பு களும் அமையவில்லை. காலை 9 மணிக்கு படப்பிடிப்பிடிப்புக்கு சென்று மாலை 6 மணிக்கு திரும்ப வேண்டும் என்று விரும்பு கிறேன். கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பை வைத்துக்கொள்ளக் கூடாது. வெளிநாட்டு படப்பிடிப்பு என்றாலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடு திரும்பாமல் இருக்க முடியாது. இப்படி எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன். நானே ஒரு தயாரிப் பாளராகவும், ஒரு இயக்குநரின் மனைவியாகவும் இருக்கிறேன். ஒரு படம் தொடங்கியதும் தயாரிப்பாளருக்கு இருக்கும் வேலைகள், நெருக்கடிகள், கிரியேட்டரான இயக்குநருக்கு இருக் கும் பொறுப்புகள் என்னென்ன என்று எனக்குத் தெரியும். இப்படி இருக்கும்போது வெளி நிறுவனம் ஒன்றில் ஒப்பந்தமாகி தவிர்க்க முடியாத சிரமங்களை அவர்களுக்கு கொடுத்துவிடக்கூடாது இல்லையா? அதனாலும் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருக்கிறேன். டிவி தொடர்களிலும் இனி நடிக்கப் போவதில்லை.
நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு நடிகர் விஷால் தன் குழுவினருடன் உங்களை சந்தித்தாரே?
ஆமாம். கமல்ஹாசனையும் என் னையும் சந்தித்துவிட்டு போனார். அவர் கமல்ஹாசனிடம் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. என்னிடம் பல விஷயங்கள் குறித்து பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை வெளியில் பகிர்ந்துகொள்ள முடியாது. நடிகர் சங்க விஷயத்தில் நியாயம் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கம் என் ஆதரவு நிச்சயம் இருக்கும்.
நரேந்திர மோடி, ஜெயலலிதா சந்திப்பு குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தவறாக பேசவில்லை என்று கூறியிருக்கிறீர்களே?
இப்போது அதைப் பற்றி பேச வேண்டாமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT