Published : 01 Apr 2020 08:27 PM
Last Updated : 01 Apr 2020 08:27 PM
கரோனா வைரஸ் பாதிப்புக்கு, நடிகை ஸ்ரீப்ரியாவின் குடும்பத்தினர் 30 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று (ஏப்ரல் 1) புதிதாக 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்று இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த 21 ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்துள்ளன. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே. மீதி எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு மற்றும் கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பிஎம் கேர்ஸ் ஃபண்ட்டுக்கு பல்வேறு தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் என நிதியுதவி அளிக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல் முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவிகள் வரத் தொடங்கியுள்ளன. தற்போது ஸ்ரீப்ரியாவின் குடும்பத்தினரான நடிகை லதா, கணவர் ராஜ்குமார் சேதுபதி, மகள் சிநேகா மற்றும் மகன் நாக் அர்ஜுன் ஆகியோர் ஒன்றிணைந்து 30 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இதில் 15 லட்ச ரூபாய் மத்திய அரசின் நிவாரண நிதியான பிஎம் கேர்ஸ் ஃபண்ட்டுக்கும், 15 லட்ச ரூபாய் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT