Published : 27 Mar 2020 06:18 PM
Last Updated : 27 Mar 2020 06:18 PM
கரோனா முன்னெச்சரிக்கையால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், தங்களுக்கும் உதவிட வேண்டும் என்று சின்னத்திரை கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திரையுலகப் பிரபலங்கள், தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே வீட்டிற்குள்தான் இருக்கிறார்கள். இதில் தினக்கூலி பணியாளர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நிதியுதவியாகவும், பொருளுதவியாகவும் உதவிகள் செய்திருக்கிறார்கள். இதேபோன்று நடிகர் சங்கமும் நாடக நடிகர்களுக்கு உதவி கோரியது. உடனடியாக பல்வேறு நடிகர்களும் உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது, சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பும் உதவிகள் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
''உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த கரோனா தாக்குதலால், சின்னத்திரை உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதால், இந்தத் தொழிலையே நம்பி வாழும் சின்னத்திரை கூட்டமைப்பைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒலிப்பதிவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் பெரிய திரையைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்களும் நடிகர்களும் பெப்சி மூலமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து கொண்டிருப்பது ஆறுதலாக இருக்கிறது. அதேபோல், சின்னத்திரையை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வேதனைகளைக் குறைக்க எங்கள் சங்க உறுப்பினர்களுக்குப் பண உதவியோ, பொருளுதவியோ செய்தால் அது அவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பேருதவியாக இருக்கும்.
இந்த உதவிகளை நாங்கள் என்றென்றும் மறக்கமாட்டோம். மாறாக உங்கள் உதவியை உலகத்திற்குப் பறைசாற்றுவோம்''.
இவ்வாறு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனுடன் வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT