Published : 14 Mar 2020 04:28 PM
Last Updated : 14 Mar 2020 04:28 PM
'அருவா' படத்தின் கதைக்களம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'அருவா' படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
இதனிடையே, 'அருவா' படத்தின் கதைக்களம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"சுவாரசியமான கதை. ஹரி - சூர்யா இணையின் ஆறாவது படம் இது. ஹரியுடன் எனக்கு நான்காவது படம். 'சிங்கம்' ஆரம்பித்தபோது இவர்கள் இணை வேறொரு பாதையில் சென்றது. போகப் போக குடும்பம், உணர்வுகள், சென்டிமென்ட் ஆகிய விஷயங்கள் காணாமல் போயின. 'அருவா'வில் ஹரி மீண்டும் அந்தப் பாணிக்கு வருகிறார். நான் கேட்டவரை 'அருவா', 'வேல்' மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களின் கலவை என்று சொல்ல முடியும்.
சமீபத்தில் 'விஸ்வாசம்' படம் வெற்றி பெறக் காரணம் அதிலிருந்த உணர்வுகள்தான். குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சினைகளைக் காட்டும் படங்களைப் பார்க்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நம்புகிறோம். ’அருவா’ சகோதரர்களைப் பற்றிய படம்.
’விஸ்வாசம்’ ஆரம்பித்து வைத்த ட்ரெண்ட் என்று சொல்கிறார்கள். உண்மையில் இது ஹரியின் பாணியே. 'தாமிரபரணி’, 'வேல்’, 'வேங்கை’ படங்களைப் பார்த்தால் இந்தப் படங்களில் குடும்ப உறவுகள், அத்தை, தங்கை போன்றவர்கள் தான் மையமாக இருப்பார்கள். ’சிங்கம்’ ஆரம்பித்ததிலிருந்து ஹரி அந்தப் பாணியைக் கைவிட்டுவிட்டார். அவர் படங்கள் எல்லாம் மாஸ் படங்களாகிவிட்டன. மீண்டும் 'அருவா’வில் பழைய பாணிக்கு வருகிறார். முந்தைய ஹரி - சூர்யா படங்களைப் போல இது இருக்காது.
'அருவா’ என்ற தலைப்பு ஒரு கிராமத்து உணர்வைக் கொடுக்கிறது. அருவாவை ஹரியின் எல்லாப் படங்களிலும் பார்க்க முடியும் அது ஒரு வேளை காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த தலைப்பைத்தான் இயக்குநர் சொன்னார். கதை தெரியும் என்பதால் இது சரியான தலைப்பு என நினைக்கிறேன்”.
இவ்வாறு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT