Published : 13 Mar 2020 07:51 PM
Last Updated : 13 Mar 2020 07:51 PM
விந்தணு தானம் அளிக்கும் இளைஞன் சந்திக்கும் போராட்டங்களே 'தாராள பிரபு'.
கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார் விவேக். அப்போது தன்னிடம் வரும் தம்பதியினருக்காக விந்தணு தானம் அளிப்பவரைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார். முழு ஆரோக்கியமான அக்மார்க் நல்லவர் ஹரிஷ் கல்யாண், அவரது கண்ணில் படுகிறார். கால்பந்து விளையாடிக் கொண்டே அதன் மூலம் வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறார் ஹரிஷ் கல்யாண். அவருக்குத் தேவையான உதவிகள் எல்லாம் செய்து, அவரை விந்தணு தானம் அளிக்க வைக்கிறார் விவேக். அதற்குப் பிறகு வரும் சந்தோஷம், பிரச்சினை, அவை எப்படிச் சரியாகிறது என்பதுதான் திரைக்கதை.
2012-ம் ஆண்டு வெளியான 'விக்கி டோனர்' இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். சில படங்கள் ரீமேக் செய்கிறேன் என்று ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுவார்கள். ஆனால், திரைக்கதையில் சில இடங்களை மட்டும் மாற்றி, இந்திப் படத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் கிருஷ்ணா மாரிமுத்து. விந்தணு தானம் என்ற களத்தில் இன்னும் கொஞ்சம் காட்சிகளைச் சேர்த்திருந்தால், படத்தின் தன்மை மாறியிருக்கும். ஆனால், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமல் காட்சிகளை அமைத்த விதத்தில் இயக்குநருக்குப் பூங்கொத்து.
'பியார் ப்ரேமா காதல்' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாகவே நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். ஆனால், உணர்ச்சிமயமான காட்சிகளில் நடிக்க இன்னும் பயிற்சி தேவை. அதே போல் நடனக் காட்சிகளுக்கு இன்னும் மெனக்கிடல் தேவை.
இவரைத் தாண்டி படத்தின் நாயகன் என்று விவேக்கை கூறலாம். கருத்தரிப்பு மையம் நடத்தும் மருத்துவர் கண்ணதாசனாக அசத்தியிருக்கிறார். அவருடைய காமெடிகளை இந்தப் படத்தில் ரசிக்க முடிகிறது. காமெடி காட்சிகளைத் தாண்டி சென்டிமென்ட் காட்சிகளில் கூட தன்னை நிரூபித்திருக்கிறார். அவருடைய திரை வாழ்க்கையில் இந்தப் படம் நிச்சயம் இடம் பிடிக்கும்.
படத்தின் நாயகியாக தான்யா ஹோப். அவருடைய நடிப்பு, வசன உச்சரிப்பு எல்லாம் சரியாக இருந்தாலும் மேக்கப் பல இடங்களில் ரொம்பத் தூக்கலாக இருந்தது. அதுவே சில காட்சிகளில் உறுத்தலாகவும் இருந்தது. அதைச் சரி செய்திருக்கலாம். ஹரிஷ் கல்யாணனின் அம்மாவாக அனுபமா, பாட்டியாக சச்சு இருவருமே தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம். எந்தவொரு காட்சியையும் அதன் தன்மை மாறாமல், உறுத்தாமல் படமாக்கியிருக்கிறார். அனிருத், ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின், மேட்லி ப்ளூஸ் என 8 இசையமைப்பாளர்கள் இணைந்து பாடல்களை உருவாக்கியுள்ளனர். சில பாடல்களைக் காட்சிகளுக்குத் தகுந்தாற் போல் சிறுசிறு துண்டுகளாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், பின்னணி இசையை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி இருக்கலாம்.
தெலுங்கில் 'கேங் லீடர்' படத்துக்காகப் போட்ட ப்ரோமோ பாடலை, அப்படியே தமிழுக்கு மாற்றிக் கொடுத்துள்ளார் அனிருத். ஏனோ, அந்தப் பாடல் தமிழுக்குச் சுத்தமாகப் பொருந்தவில்லை.
கணவனுக்கும் சேர்த்து நான் சம்பாதிப்பேன் என்று சொல்வது, விவாகரத்துக்குப் பிறகு திருமணம் தப்பில்லை, குழந்தை இல்லையென்றால் தத்தெடுப்பதில் தவறில்லை, கருத்தரிப்பில் பிரச்சினை என்றால் அறிவியலின் உதவியை எடுத்துக் கொள்வதில் எந்தவொரு கவுரவக் குறைச்சலும் இல்லை உள்ளிட்ட பல விஷயங்களை மெசேஜ் ஆகச் சொல்லாமல் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்கள். காமெடி, எமோஷன் இரண்டையுமே தேவையான அளவு மட்டும் வைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது ஆறுதல்.
படத்தின் கதைப்படி விவேக் - ஹரிஷ் கல்யாண் இருவருக்கும்தான் உரையாடல்கள் அதிகம். அதில் விவேக் மூத்த நடிகர் என்பதால் அவருடன் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் காட்சிகளில் எல்லாம் சற்று தயக்கத்துடனே நடித்திருப்பது தெரிகிறது. அதேபோல் காதல் காட்சிகள் என வரும் சில மான்டேஜைக் குறைத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகளில் படம் கொஞ்சம் தொய்வு அடைகிறது.
தமிழகத்தில் இப்போது விந்தணு தானம் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். இந்தப் படத்தின் மூலம் அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதே வேளையில், கொஞ்சம் காமெடி, சென்டிமென்ட் என்று சரியான விதத்தில் கலந்து பார்வையாளர்களைக் கவர்கிறான் இந்த 'தாராள பிரபு'.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT