Published : 02 Mar 2020 01:36 PM
Last Updated : 02 Mar 2020 01:36 PM
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு நாசரின் மனைவி கமீலா நாசர் பதிலளித்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த விஷாலின் பதவிக்காலம் என்பது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலை வரும்போது, சங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தனி அதிகாரி ஒருவரை நியமித்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, ஜூன் 30-ம் தேதிக்குள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் யாரெல்லாம் போட்டியிட உள்ளார்கள் என்று பல்வேறு தகவல்கள் உலவி வருகின்றன. விஷால் அணிக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் சத்யஜோதி தியாகராஜன் ஆகியோர் இணைந்து ஒரு அணியை உருவாக்கி, தேர்தலைச் சந்திக்கவுள்ளனர்.
இம்முறை தான் போட்டியிடாமல் தனது அணியினர் சார்பில் நாசரின் மனைவி கமீலா நாசரை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிறுத்த விஷால் திட்டமிட்டார். இது தொடர்பாக கமீலா நாசரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார் விஷால். இதனிடையே, கமீலா நாசர் தனது ட்விட்டர் பதிவில், "இன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை நன்கு அறிவேன். அதற்காக கவலையும் அக்கறையும் கொள்கிறேன்.
இந்நிலைக்குத் தள்ளியவரோடு கரம் கோக்கவில்லை. எந்த அணியோடும் இப்போதுவரை இல்லை. சங்கத்தின் மேன்மைக்காக உழைப்பவரோடு மட்டுமே என் கை இணையும்" என்று தெரிவித்துள்ளார் கமீலா நாசர்.
இந்த ட்விட்டர் பதிவில் விஷாலை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
நடிகர் சங்கத்தில் விஷால் அணியில் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நாசர். செயலாளராக வெற்றி பெற்றவர் விஷால். இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். நாசர் மனைவியின் ட்விட்டர் பதிவின் மூலமாக நாசர் - விஷால் இருவருக்குமே மோதல் ஏற்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது.
கமீலா நாசரின் ட்வீட்டின் மூலம் அவர் போட்டியிடவில்லை என்பது தெளிவாகிவிட்டாலும், விஷால் அணியிலிருந்து யார் போட்டியிட இருப்பது என்பது விரைவில் தெரியவரும். டி.சிவா அணி, விஷால் அணி ஆகியோரைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியும் ஒரு அணியை உருவாக்கி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலைச் சந்திக்கவுள்ளார் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT