Published : 23 Feb 2020 06:33 PM
Last Updated : 23 Feb 2020 06:33 PM
என் தந்தை என்னிடம் அடிக்கடி “உண்மையான வெற்றி என்பது தியேட்டர் உரிமையாளர்களின் முகத்தில் வழியும் புன்னகையில் இருக்கிறது” என்பார். அதை நேரில் கண்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடித்த மாஃபியா படம் கடந்த 21-ம் தேதி வெளியானது. இந்நிலையில் திரையரங்குகளில் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார் அருண் விஜய். நேற்று கோயம்புத்தூர் ஐநாக்ஸ் திரையரங்கில் அருண் விஜய் ரசிகர்களைச் சந்தித்தார். அங்கு ரசிகர்கள் அருண் விஜய்யை நேரில் கண்டதில் உற்சாக மிகுதியில் கொண்டாடித் தீர்த்தனர்.
இதுகுறித்து நடிகர் அருண் விஜய் கூறுகையில், ''கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய நட்சத்திரங்களைக் கண்மூடித்தனமாக கொண்டாடுவதில்லை. அவர்கள் தரமான படங்களையே கொண்டாடுவார்கள். நல்ல படங்களுக்கு பெரும் வரவேற்பு தருவார்கள். நான் அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் காட்டிய அன்பில், உணர்வுகளின் குவியலில் சிக்கி மனம் நெகிழ்ந்து போனேன். அவர்கள் தந்த வரவேற்பும், அன்பும் மறக்க முடியாதது.
பலர் தனித்தனியாக வந்து படத்தின் தொழில்நுட்ப அம்சங்களை தனித்தனியே குறிப்பிட்டு பேசியது பெரும் ஆச்சர்யமாக இருந்தது. தயாரிப்பு தரப்பான லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு பெரும் நன்றிகள். என் தந்தை என்னிடம் அடிக்கடி “உண்மையான வெற்றி என்பது தியேட்டர் உரிமையார்களின் முகத்தில் வழியும் புன்னகையில் இருக்கிறது” என்பார். அதை நேரில் கண்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது.
முன் திரையிடல் காட்சிகள், விமர்சனங்கள், ரசிகர்களின் கொண்டாடங்களுக்கு பிறகு கோயம்புத்தூர் முதலாக அனைத்து இடங்களிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்திய செய்திகள் மேலும் மகிழ்ச்சியைக் கூட்டியுள்ளன'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT