Published : 23 Feb 2020 01:32 PM
Last Updated : 23 Feb 2020 01:32 PM

யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள்: சிம்பு 

யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள். நான் கூறுவது அறிவுரை அல்ல. பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று சிம்பு பேசினார்.

நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த நடிகர் சிம்பு, நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

படங்களில் ஒருவன் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனை அனைவரும் கீழே தள்ளுகின்றனர். காதலில் பிரச்சினை ஏற்படுகிறது. அவனுக்குப் பெயர்தான் ஹீரோ. அதே படத்தில் ஒருவன் எந்த பிரச்சினைகளுமின்றி ஜெயித்துக் கொண்டே இருக்கிறான். அவனுக்குப் பெயர் வில்லன். நிஜ வாழ்விலும் அப்படித்தான். ஒருவனை கீழே தள்ளுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள். மேலே வரவிடாமல் தடுக்கிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோவாக என்னை நீங்கள் ஆக்கியிருக்கிறீர்கள்.

யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள். நான் கூறுவது அறிவுரை அல்ல. பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். கஷ்டம் வந்தால் கவலைப்படாதீர்கள். கஷ்டம் வந்தால் முதலில் பாட்டுப் போட்டு டான்ஸ் ஆடுங்கள். 10 பேர் நம்மைத் திட்டுகிறார்கள் என்றால் நாம் ஜெயிக்கிறோம் என்று அர்த்தம்.

பிரச்சினை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை. நானே உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். எல்லாரும் இவன் வேண்டாம், இவன் கெட்டவன், இவனை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனாலும், ஏன் என்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

நீங்கள் இப்படி கை தட்டி கை தட்டி ஏற்றி விடுவதால் அவர்கள் என்னைத் தேவையில்லாமல் சீண்டுகிறார்கள். அனைத்துப் பிரச்சினைகளையும் தாண்டி இப்போதுதான் ’மாநாடு' ஆரம்பித்திருக்கிறது. நீங்கள் இப்படியெல்லாம் செய்தீர்களென்றால் அவர்களுக்கு எப்படி கோபம் வரும்?

சிம்பு பெண்களைத் திட்டுகிறார் என்று சொன்னார்கள். ஆனால், அந்தப் பெண்கள்தான் என் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் முதலில் குரல் கொடுப்பதும் நான்தான். அவர்களுக்குப் பிரச்சினை தருபவர்களை சும்மா விடமாட்டேன்’’.

இவ்வாறு சிம்பு பேசினார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் 'மாநாடு'. நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையில் இருந்த இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் சிம்புவுடன் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x