Published : 18 Feb 2020 10:15 AM
Last Updated : 18 Feb 2020 10:15 AM

'நெற்றிக்கண்' ரீமேக் சர்ச்சை: கவிதாலயா நிறுவனம் விளக்கம்

'நெற்றிக்கண்' ரீமேக் சர்ச்சை தொடர்பாக, கவிதாலயா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ரஜினி நடிப்பில் வெளியான 'நெற்றிக்கண்' படத்தை ரீமேக் செய்ய ஆசை என்று பல பேட்டிகளில் கூறியிருந்தார் தனுஷ். இதனை முன்வைத்து சமீபமாக 'நெற்றிக்கண்' ரீமேக் உரிமையை தனுஷ் கைப்பற்றிவிட்டதாகவும், தற்போதுள்ள காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரபூர்வத் தகவல் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாயின.

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் விசு தனது யூ டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 'நெற்றிக்கண்' படத்தின் கதாசிரியர் என்ற முறையில் என்னிடம் உரிமை வாங்க வேண்டும் எனவும், தனுஷ் படத்தைத் தொடங்கினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன் என்றும் வீடியோவில் பேசியிருந்தார் விசு. மேலும், கதை உரிமை தொடர்பாக தனக்கு நடந்த அநீதிகளைப் பட்டியலிட்டார். அதில் கவிதாலயா நிறுவனத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

தற்போது 'நெற்றிக்கண்' ரீமேக் தொடர்பாகவும், விசுவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் கவிதாலயா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில் திரைப்படத் தயாரிப்புத் துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம். தமிழ்த் திரையுலக ஜாம்பவான் கே. பாலசந்தரால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக் காப்புரிமை குறித்து மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆகையால், ஒருபோதும் இந்நிறுவனம் விதிமீறல்களுக்கு எந்த விதத்திலும் இடம் அளித்ததில்லை. மேலும், கவிதாலயா எழுத்தாளர்களின் பங்கையும், முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்திருப்பதால், அவர்களை மிகுந்த மரியாதையுடனேயே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது. இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்குப் புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம். அது குறித்துத் தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

'நெற்றிக்கண்' திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களை அணுகவும் இல்லை. நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தைத் தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. அவ்வாறு, ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். செயல்பட்டும் வந்திருக்கிறது.

மேலும், விசு கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்த மீறல்களுக்கும் விதிமீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை இதன் மூலம் வலியுறுத்திக் கூறுவதோடு அனைத்து தரப்பினருக்கும் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது கவிதாலயா நிறுவனம்.

தவறவிடாதீர்!

இயக்குநர் ராஜ் கபூரின் மகன் திடீர் மரணம்

குடும்பத்தையும், கட்சியையும் காப்பாற்ற மீண்டும் நடிக்கிறேன்: பவன் கல்யாண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x