Published : 17 Feb 2020 08:34 PM
Last Updated : 17 Feb 2020 08:34 PM
இயக்குநர் மற்றும் நடிகர் ராஜ் கபூரின் மகன் ஷாரூக் கபூர் மூச்சுத் திணறல் காரணமாகக் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 23.
தமிழ்த் திரையுலகில் 1991-ம் ஆண்டு 'தாலாட்டு கேக்குதம்மா' படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். அதனைத் தொடர்ந்து 'சின்ன ஜமீன்', 'வள்ளல்', 'அவள் வருவாளா', 'ஆனந்த பூங்காற்றே' உள்ளிட்ட பல வரவேற்புப் பெற்ற படங்களை இயக்கியவர் ராஜ் கபூர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
சமீபமாக சீரியல்கள் பக்கம் கவனம் திரும்பி 'நந்தினி', 'ராசாத்தி' ஆகிய சீரியல்களை இயக்கினார். மேலும், பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவருடைய மகனின் பெயர் ஷாரூக் கபூர். சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது அப்போது இவரது உடல்நிலை கொஞ்சம் மோசமடையும் போது, மெக்காவுக்கு வருவதாக ராஜ் கபூர் வேண்டியுள்ளார்.
மகனின் உடல்நிலை சீரானவுடன், அம்மா ஷாஜிலா கபூருடன் மெக்காவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள தட்பவெப்ப நிலை ஷாரூக் கபூரின் உடலுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது உடல்நிலை மோசமாகிக் காலமாகியுள்ளார். அவரது உடலை மெக்காவிலேயே நல்லடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக ராஜ் கபூர் மெக்காவுக்கு செல்கிறார்.
ராஜ் கபூரின் மகன் ஷாரூக் கபூருக்கு வயது 23 தான் ஆகிறது. தன் மகனை திரையுலகில் நாயகனாக அறிமுகப்படுத்த, தீவிர முயற்சியிலிருந்தார் ராஜ் கபூர். இந்த திடீர் மரணத்தால் ராஜ் கபூர் குடும்பத்தினருக்கு, அவரது திரையுலக நண்பர்கள் பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.
தவறவிடாதீர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT