Published : 17 Feb 2020 06:47 PM
Last Updated : 17 Feb 2020 06:47 PM

2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சினிமாவும் பையனூருக்கு மாறிவிடும்: ஆர்.கே.செல்வமணி நம்பிக்கை

இன்னும் 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சினிமாவும் பையனூருக்கு மாறிவிடும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பையனூரில் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காகத் தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில், தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக விவாதிக்க இன்று (பிப்ரவரி 17) பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கியமான சங்கத்தின் தலைவர்கள் கூடிய கூட்டம் நடைபெற்றது. இதில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டம் முடிவடைந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:

''பையனூரில் அரசு எங்களுக்கு வழங்கிய நிலத்தில், முதற்கட்டப் பணிகள் முடிவடைந்து இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் அடிக்கல் நாட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக அனைத்து சங்கத்து உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இன்று பொதுக்குழு ஒன்றை நடத்தினோம். அதில் சுமார் 1000 உறுப்பினர்கள் வரை எங்களுக்கு வீடு தேவை, பணம் கட்டத் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், அரசு எங்களுக்கு வழங்கிய நிலத்தில் 6000 குடியிருப்புகள் கட்ட இயலும். முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டவுள்ளோம். மேலும், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பணியாளர்கள் எனத் தொடங்கி அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் அமைத்து திரைப்பட நகரமாக உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும்.

25 ஆண்டுகளாக பெப்சி அமைப்பின் முயற்சி இது. அரசு பல முறை உதவி செய்தும், எங்களால் செய்ய முடியாமல் போய்விட்டது. இப்போதுதான் அந்தக் கனவு நனவாகியுள்ளது. 50 ஏக்கர் இடம் கொடுத்துள்ளார்கள். இதில் சுமார் 6000 வீடுகள் கட்டவுள்ளோம். மேலும், 15 ஏக்கர் நிலத்தில் இப்போது 2 ஸ்டுடியோக்கள் கட்டி வருகிறோம். அது முடிவதற்குள் அடுத்ததாக 5 ஸ்டுடியோக்கள் கட்டிவிடுவோம். அடுத்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சினிமாவும் பையனூருக்கு மாறிவிடும்''.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x