Published : 14 Feb 2020 04:00 PM
Last Updated : 14 Feb 2020 04:00 PM

முதல் பார்வை: நான் சிரித்தால்

சோகம், அழுகை வந்தால் சிரிக்கும் நாயகன், காதலிலும் வில்லனிடமும் படும் அவஸ்தையே 'நான் சிரித்தால்'.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் காந்திக்கு (ஹிப் ஹாப் ஆதி) துக்கம் மற்றும் பிரச்சினை ஏற்பட்டால் சிரிக்கும் வியாதி. இந்த வியாதியினால் அவரது வேலை சிக்கலுக்கு உள்ளாகிறது. இதனால் அவரது காதலியும் பிரிகிறார். இதற்கிடையே டில்லிபாபு (கே.எஸ்.ரவிகுமார்) - சக்கரை (ரவிமரியா) இருவருக்கும் இடையே யார் பெரிய ரவுடி என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் டில்லிபாபுவைக் கொலை செய்ய சக்கரை ஆட்களை அனுப்புகிறார். அப்போது தன் நண்பன் டில்லிபாபுவைத் தேடும்போது, சக்கரை அனுப்பிய காரில் ஏறிவிடுகிறார் காந்தி. இதனால் ஏற்படும் குழப்பங்களே படம்.

தான் இயக்கிய 'கெக்க பெக்க' என்ற குறும்படத்தை திரைப்படமாக வடித்துள்ளார் ராணா. குறும்படத்தைப் படமாக்கும்போது நிறைய காட்சிகள் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்க்கும்போது பல கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி திரைக்கதையை இழுத்திருக்கிறார். அதுதான் படத்தின் பிரச்சினை. பல காட்சிகளுக்குப் படத்தில் சிரிப்பே வரவில்லை.

கதையின் நாயகன் காந்தியாக ஹிப் ஹாப் ஆதி. பெரிதாக நடித்திருக்க வேண்டிய படம், ஆனால் சில காட்சிகளுக்கு மட்டுமே தேவையானதைச் செய்துள்ளார். துக்கம், சோகம், வலி என வரும்போது சிரிக்கிறார். மற்றபடி நண்பர்களுக்கு உதவுவது, காதலுக்காக ஏங்குவது என முந்தைய படங்களில் அவர் நடித்த கதாபாத்திரத்தை மீண்டும் செய்துள்ளார்.

நாயகி ஐஸ்வர்யா மேனனுக்குப் பெரிதாக வேலையில்லை, சில காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு மட்டுமே உபயோகப்பட்டுள்ளார். ஹிப் ஹாப் ஆதியின் அப்பாவாக நடித்துள்ள படவா கோபியின் கதாபாத்திரத்தை சில காட்சிகளில் ரசிக்க முடிகிறது. அதிலும் மகனின் காதலி வீட்டுக்குப் போய் முதலில் கெஞ்சிவிட்டு பெண் தரமாட்டார்கள் என்றவுடன், அப்படியே மாறி கலாய்ப்பது ரசனை.

சிரிப்பு வில்லன்களாக கே.எஸ்.ரவிகுமார் - ரவிமரியா. இருவரில் ரவிமரியா கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்துள்ளார். ஷாரா, ராஜ்மோகன், முனீஷ் காந்த், எருமசாணி விஜய் என படம் முழுக்க நிறைய கதாபாத்திரங்கள். ஆனால், நிறைய காமெடி செய்திருக்க வேண்டிய இடங்கள் உள்ளன. அதிலும் நமக்குச் சிரிப்பை வரவைக்க முயன்றுள்ளனர். சில காட்சிகள் தவிர மற்ற எதிலுமே சிரிப்பே வரவில்லை.

கிளைமாக்ஸில் யோகி பாபு வருகிறார். அவருடைய வீடியோக்கள் மூலமாகச் சிரிக்க வைக்கிறார். அதிலும் இவர் சோகமாக ஆதியிடம் விவரிக்கும் விதமும், அதற்கு ஆதியின் சிரிப்பும் ரசிக்க முடிகிறது. சின்ன கதாபாத்திரம்தான் என்றாலும் அதில் ஸ்கோர் செய்துள்ளார் யோகி பாபு.

வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளை ரசிக்க வைக்கிறது. வசனக் காட்சிகளுக்கு என்ன தேவையோ அதைக் கச்சிதமாக எந்தவொரு காட்சியுமே உறுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் 'பிரேக் அப்' பாடலும், அதைக் காட்சிப்படுத்திய விதமும் ரசிக்க வைக்கிறது. ஆனால், இதர பாடல்களிலும் பின்னணி இசையிலும் வழக்கமான ஆதி மிஸ்ஸிங்.

படம் தொடங்கும்போது, இரண்டு ரவுடிகளுக்கு இடையேயான மோதல் என்று தொடங்குகிறது. இது ரவுடியிஸம் கலந்த கதை என்று நினைக்கும்போது, கதை அப்படியே காதல் பிரச்சினைக்குத் தாவுகிறது. இது காதல் பிரச்சினை என்று நினைக்கும்போது அப்படியே நாயகன் சோகமாக இருக்கும்போது சிரிப்பார் என்ற பிரச்சினையில் தொடங்குகிறது. தேவையில்லாமல் நிறைய காட்சிகள் உள்ளன. அதை எல்லாம் அப்படியே தூக்கியிருக்கலாம். முதல் பாதியில் 4 பாடல்கள் வேறு.

இரண்டாம் பாதியில் சிரிக்க வைக்கிற சில காட்சிகள் இருப்பதை மறுக்க முடியாது. OTP மூலமாக வரும் குழப்பத்தைச் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. சுந்தர்.சி படங்களில் வரும் குழப்பத்தை, ஒரே இடத்தில் அனைவரையும் வரவைத்து காமெடி செய்து சுபம் போடுவார். அதை அப்படியே சுந்தர்.சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் செய்திருக்கிறார் ராணா. இரண்டாம் பாதியில் கல்யாண மண்டபத்தில் வரும் காட்சிகளை ரசிக்க முடிவதால், படம் தப்பிக்கிறது.

மொத்தத்தில் 'நான் சிரித்தால்' படத்தில் நாயகன் ஆதி படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், நமக்கோ ஒரு சில காட்சிகள் வரும் சிரிப்பைத் தவிர்த்து, சிறு புன்னகையுடன்தான் கடக்க முடிகிறது.

தவறவிடாதீர்

சுந்தர்.சி படத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்

விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா, சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x