Published : 10 Feb 2020 06:34 PM
Last Updated : 10 Feb 2020 06:34 PM
தண்ணீர் பாதுகாப்பு குறித்த கண்காட்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு யோசனை தெரிவித்தார்.
தண்ணீரின் அவசியம், சேமிப்பு உள்ளிட்ட தண்ணீர் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து சென்னையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும் போது, "ஏழையோ, பணக்காரனோ குடிக்கும் தண்ணீர் குழாயில் வர வேண்டும். இப்போது நாம் யோசித்து யோசித்து மினரல் வாட்டர் குடித்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது மனித உரிமை. அது அனைவரும் சேர்ந்தால் கண்டிப்பாக நடக்கும்.
தண்ணீர் குடிப்பது என்பது வழக்கமான ஒன்று. அனைவரும் முக்கியத்துவம் அளித்து தண்ணீருக்காக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தாலே இன்னுமொரு 10 அல்லது 15 ஆண்டுகளில் நல்ல தீர்வு கிடைக்கும். ஏனென்றால் தேவையில்லாத நிறைய விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதெல்லாம் இல்லாமல் நம் உடலுக்கும், வருங்காலத்துக்கும் தண்ணீர்தான் முக்கியம்.
தற்போதுள்ள இளம் தலைமுறையினரிடம் தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிவிட்டோம். தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலக அளவிலான ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளேன். விரைவில் அது வெளியாகும்” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT