Published : 08 Feb 2020 01:23 PM
Last Updated : 08 Feb 2020 01:23 PM
பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு மேல் ஒதுக்கக் கூடாது என, பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு அன்புமணி ராமதாஸ் இன்று (பிப்.8) எழுதிய கடிதத்தில், "தமிழ்நாட்டில் மொத்தம் 997 திரையரங்குகள் உள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 300 தமிழ் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் 100 பெரிய, நடுத்தர பட்ஜெட் படங்கள் வெளியாகி விடுகின்றன. சிறிய திரைப்படங்களில் சுமார் 100 திரைப்படங்கள் தட்டுத்தடுமாறி வெளியாகின்றன. மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகாமல் முடங்கி விடுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் திரையரங்குகள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை மட்டும் 1,200-க்கும் அதிகம் என்றும், அந்தத் திரைப்படங்களை தயாரித்த வகையில் முடங்கிக் கிடக்கும் தொகை ரூ.2,500 கோடிக்கும் அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படங்கள் வெளியில் வராததால் சொத்துகளை இழந்தும், வட்டி கட்டியே திவாலாகியும் வீதிக்கு வந்த குடும்பங்கள் நூற்றுக்கணக்கானவை ஆகும். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் தொழிலாகக் கருதப்படும் திரைத்துறையின் அவலமான மறுபக்கம் இது.
திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவதை முறைப்படுத்தினால், தமிழில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களையும் வெளியிட முடியும். ஆண்டுக்கு 300 திரைப்படங்கள் தயாரிக்கப்படும் பட்சத்தில் வாரத்திற்கு 2 பெரிய பட்ஜெட் திரைப்படங்கள், 4 சிறிய பட்ஜெட் படங்கள் என 6 படங்களை வெளியிடலாம்.
இரு பெரிய பட்ஜெட் படங்களுக்கு தலா 250 வீதம் 500 திரையரங்குகளை ஒதுக்கினால் மீதமுள்ள திரையரங்குகளில் 4 சிறிய பட்ஜெட் படங்களை தாராளமாக வெளியிட முடியும். இதனால் அனைத்துத் தயாரிப்பாளர்களும் நன்றாக வாழ முடியும். அதிக திரைப்படங்களை தயாரிக்க முடியும். அதன்மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன், புதிய படைப்பாளிகளும் உருவெடுப்பார்கள். இது தமிழ்த் திரையுலகம் தழைத்தோங்குவதற்கு வழி வகுக்கும் என்பது உறுதி.
ஆனால், தமிழ்த் திரையுலகில் நிலைமை தலைகீழாக உள்ளது. பெரிய நட்சத்திரங்கள் நடித்து, பெரிய பட்ஜெட் படம் வெளியாகும் போது 70 முதல் 80 விழுக்காடு திரையரங்குகள் அந்த ஒரு படத்திற்கே ஒதுக்கப்படுகின்றன. இதனால் அதே தேதியில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது.
குறிப்பாக, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது அனைத்து திரையரங்குகளையும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் தான் ஆக்கிரமிக்கின்றன. அப்படியே சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியானாலும் கூட, மக்கள் கூட்டம் அதிகம் வராத காலைக்காட்சி, மதியக் காட்சி ஆகியவை தான் அந்தப் படங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதனால் ஓரிரு நாட்களில் அந்தப் படங்கள் தூக்கப்படுகின்றன. அந்த காட்சிகளையும் பெரிய நட்சத்திர, பெரிய பட்ஜெட் திரைப்படங்களே ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
ஓர் ஆண்டில் மொத்தமுள்ள 52 வாரங்களில் 50 பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியானால், நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் திரைப்படங்களை வெளியிடவே வாய்ப்பில்லாமல் போய்விடும். தடைகளைத் தாண்டி வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் குறித்து நல்ல விமர்சனம் பரவி, அப்படங்களை மக்கள் பார்க்க வருவதற்கு முன்பாகவே அந்தத் திரைப்படங்கள் திரையரங்குகளில் இருந்து அகற்றப்படும்.
மொத்தத்தில் இன்றைய சூழலில் சிறிய மீன்களை பெரிய மீன்கள் விழுங்குவது போன்ற நிலைமை தான் திரையுலகிலும் நிலவுகிறது. திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் சிலர் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, தாங்கள் விரும்பும் திரைப்படங்களுக்கு மட்டுமே திரையரங்குகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.
சென்னையில் உள்ள திரைகளில் 90 விழுக்காடு திரைகளில் ஒரே திரைப்படம் ஓடும் நிகழ்வை பல வாரங்களில் பார்க்க முடியும். இப்படித்தான் சிறிய நட்சத்திரங்கள் நடிக்கக்கூடிய படங்களுக்கும், சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய தீமையும், துரோகமும் இழைக்கப்படுகிறது.
சிறிய திரைப்படங்கள் வெளியிடப்படாததால் அவற்றின் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்படுவது ஒருபுறமிருக்க, மக்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற திரைப்படங்களை பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. உதாரணமாக சென்னையில் உள்ள 90% திரையரங்குகளில் ஒரே திரைப்படம் இரு வாரத்திற்கு ஓடினால், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகின்றனர். இது மக்களுக்கு விதிக்கப்படும் கடும் தண்டனை ஆகும்.
திரையுலகில் சிலர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு திரையரங்குகள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும். அப்போது தான் திரையுலகில் அனைத்துத் தரப்பினரும் திரைப்படம் தயாரிக்க முன்வருவார்கள். அதற்காக திரைப்படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்குவது முறைப்படுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தமிழக அரசு சார்பில் பல முறை அறிவுறுத்தியும் அவை எதுவும் செவிமடுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கும் உண்மையாகும்.
இந்தியாவில் வர்த்தகத்தில் போட்டித்தன்மை மீது தீய விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் இந்திய போட்டி ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்த் திரையுலகிலும் போட்டித் தன்மையை பாதிக்கும் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தவறு செய்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் அந்த அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி, எவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடித்த படமாக இருந்தாலும், எவ்வளவு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதற்கு மொத்தமுள்ள திரையரங்குகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் கூடுதலாக ஒதுக்கப்படக்கூடாது. இதற்கு ஏற்ற வகையில், விதிகளை வகுக்கவும், தேவைப்பட்டால் சட்டத் திருத்தம் செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும்" என, அக்கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தவறவிடாதீர்
அனைத்து துறைகளிலும் ஊழல் செய்வது திமுகவுக்கு கைவந்த கலை: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT