Published : 07 Feb 2020 10:22 AM
Last Updated : 07 Feb 2020 10:22 AM
ஜீ தமிழ் சேனலில் விரைவில் தொடங்க உள்ள ‘நீதானே எந்தன் பொன் வசந்தம்’ தொடர் வழியே சின்னத்திரை நடிகராக தடம் பதிக்கிறார் ஜெய் ஆகாஷ். கதாநாயகியாக புதுமுகம் தர்ஷனா நடிக்கிறார். காதல் ததும்பும் இத்தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஏற்பதோடு, சீரியல் தயாரிப்பாளராகவும் களத்தில் இறங்கியுள்ளார் நிவாஷினி திவ்யா. அவருடன் ஒரு நேர்காணல்..
நீண்ட இடைவெளிக்கு பிறகு திவ்யாவை மீண்டும் சின்னத்திரை அழைத்திருக்கிறது போல?
ஆமா.. கிட்டத்தட்ட நாலைந்து வருஷங்கள் ஓடிச்சு. இந்தமாதிரி ஒரு நல்ல வேலைக்காகத்தான் இடைவெளி எடுத்துக்கிட்டேன். ஜீ தமிழில் ஒரு நல்ல புராஜக்ட் தொடணும்னு ரொம்ப நாட்களாகவே பேசிட்டிருந்தோம். ஜீ கன்னடத்தில் ஒளிபரப்பான ‘ஜோதே ஜோதேயலி’ தொடரின் ரீமேக்காக தமிழில் இது ஒளிபரப்பாக உள்ளது. முழுக்க காதல் கதை. இதை எஸ்டெல் என்டர்டெய்னர் சார்பில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனமும், நாங்களும் இணைந்து தயாரிக்கிறோம்.
வெள்ளித்திரை, சின்னத்திரை பார்க்காத காதல் கதையா.. இதில் என்ன புதுமை?
‘காதலுக்கு கண் இல்லை’ என்பார்களே, அதுதான் கதை. 40 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் மலரும் காதலும், அதன்மூலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் நிரம்பியதுதான் கதைக்களம். கவித்துவமான காதல் களம். கிட்டத்தட்ட சிவாஜியின்‘முதல் மரியாதை’ படம்போல. அதையே இந்ததலைமுறையினருக்கு ஏற்ப நவீனமாக்கி, இன்றைய காதல் அம்சங்களை சேர்த்து உருவாக்கி இருப்பதுதான் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’.
இதில் நீங்களும் நடிக்கிறீர்களாமே?
தயாரித்தால் நடிக்கக் கூடாதா? கதாநாயகன் ஜெய் ஆகாஷின் உதவியாளராக இத்தொடரில் வருகிறேன். அவர் ஒரு மிகப் பெரிய தொழிலதிபர். அவரோடு இருந்து, பல ஆலோசனைகளைக் கொடுக்கும் மனுஷியாக நடித்திருக்கிறேன். நெகடிவ், பாசிடிவ் என ஏதோ ஒரு வகைக்குள் என் பாத்திரத்தை பொருத்திவிட முடியாது. அது வித்தியாசமான பாத்திரமாக இருக்கும்.
கடற்கரை, விமான தளம் என பிரம்மாண்ட அரங்குகள் பின்னணியில் பிரதிபலிக்கிறதே?
தொடரின் டிரெய்லர் உள்ளிட்ட சில காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கினோம். கதையில் பெரும்பாலான பகுதிகள் சென்னையில்தான் நடக்கிறது. ஜெய் ஆகாஷ் முதல்முறையாக சின்னத்திரையில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம். ரொம்ப வித்தியாசமாக தெரிவார். நாயகி தர்ஷனா, பூர்வீகம் மலையாளி. தற்போது சேலம்வாசி. இப்போ சென்னையில் என்கூடதான் இருக்காங்க. மிகவும் உற்சாகமாக படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியுள்ளோம். இது வழக்கமான தொடராக இருக்காது. ரொம்ப மெனக்கெட்டு, அதிக செலவில் எடுக்க திட்டமிட்டுள்ளோம். அந்த வித்தியாசத்தை நேயர்கள் நன்றாகவே உணரலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT