Published : 06 Feb 2020 01:12 PM
Last Updated : 06 Feb 2020 01:12 PM
துபாயில் பேசும்போது, தற்போதைய இசையமைப்பாளர்களை மறைமுகமாக விமர்சித்துள்ளார் இளையராஜா.
துபாயில் மார்ச் 27-ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதனை விளம்பரப்படுத்தும் வகையில் துபாயில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இளையராஜா.
அப்போது, "இப்போதுள்ள தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களால் சுதந்திரமாக இசையமைக்க முடிகிறதா" என்ற கேள்வி இளையராஜாவிடம் எழுப்பப்பட்டது. அதற்கு, ''சுதந்திரமாக அவர்கள் இசையமைப்பதால் மட்டுமே பாடல்கள் நிற்பதில்லை. முழு சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது? அவர்கள் இஷ்டத்துக்கு இசையமைத்தால் முழு சுதந்திரம் என்று அர்த்தமா?'' என்று பதிலளித்தார் இளையராஜா.
மேலும், "ஒரே விஷயம் இருக்கிறது என்றால், அதே மாதிரி திரும்ப ஏன் பண்ண வேண்டும். அதே மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்டால் மற்றவர்கள் பண்ணலாம். என்னால் முடியாது. ஒவ்வொரு முறையும் புதிதாகத்தான் வரும்.
நல்லாயிருக்கோ, நல்லாயில்லையோ அல்லது விமர்சித்தாலும் கூட அவர்கள் அந்த 7 ஸ்வரங்களைத்தான் உபயோகிக்கிறார்கள். அதே ஸ்வரம்தான் என் கைக்கு வரும்போது இப்படி ஆகிறது. மற்றவர்களின் கைக்குப் போகும்போது, அவர்களுடைய ரூபத்துக்குத் தகுந்தாற் போல் மாறிக் கொள்கிறது" என்று இளையராஜா பேசினார்.
தவறவிடாதீர்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT