Published : 24 Jan 2020 06:09 PM
Last Updated : 24 Jan 2020 06:09 PM
தனக்கு ஏற்பட்ட விநோத நோயால் போலீஸ் வேலையை வெறுக்கும் ஹீரோ, பிற்காலத்தில் போலீஸ் ஆவதுதான் ‘டாணா’.
ஊரிலேயே முதன்முதலில் போலீஸ் வேலையில் சேர்ந்தவருக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றனர் கிராம மக்கள். அவருடைய குடும்பத்தினர் வழிவழியாக போலீஸ் வேலையில் சேர, அந்தக் குடும்பத்துக்கே ‘டாணா’ இல்லம் எனப் பெயர் வந்துவிடுகிறது. அப்படி போலீஸாக இருப்பவருக்குத்தான் பரிவட்டம் கட்டி, திருவிழா நடைபெறும்.
ஆனால், எதிர்பாராத திருப்பமாக பாண்டியராஜன் குள்ளமாகப் பிறந்துவிடுவதால், அவரால் போலீஸ் வேலையில் சேரமுடியாமல் போகிறது. தனக்குப் பிறகு பரிவட்டம் கட்டி திருவிழா நடத்த யாருமில்லையே என பாண்டியராஜனின் தந்தை பெரேரா கலங்க, தன் மகனை போலீஸாக்கி திருவிழா நடத்துவதாக சத்தியம் செய்கிறார் பாண்டியராஜன்.
அதன்படி, மகன் வைபவ் பிறந்ததில் இருந்தே போலீஸ் வேலைக்காகத் தயார் செய்கிறார் பாண்டியராஜன். ஆனால், எதிர்பாராதவிதமாக வைபவ்-க்கு வித்தியாசமான நோய் ஏற்படுகிறது. பயம், கோபம், சந்தோஷம் என எந்த உணர்ச்சி அதிகமானாலும், வைபவ்வின் குரல் பெண் குரலாக மாறிவிடும். அதிர்ச்சியடையும் வைபவ், போலீஸ் வேலையை வெறுக்கிறார்.
வெறுப்பு மறைந்து போலீஸ் வேலையில் அவர் சேர்ந்தாரா? வேறு என்னென்ன தடைகள் அவருக்கு ஏற்பட்டன? விநோத நோயில் இருந்து வைபவ் குணமடைந்தாரா? திருவிழா நடந்ததா? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையாக அமைந்துள்ள மீதிக்கதை.
அதிகம் அலட்டிக் கொள்ளாமல், தன்னால் இயன்ற அளவுக்கு நடித்துள்ளார் வைபவ். பெண் குரலில் அவர் பேசும் காட்சிகள், சிரிக்க வைக்கின்றன. வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரத்தில், அதற்குத் தேவையானதைத் தந்துள்ளார் நந்திதா.
முதல் பாதி முழுக்க யோகி பாபுவின் அட்டகாசம்தான். அவருடைய காமெடி வசனங்கள், வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. அவரும் வைபவ்வும் வரும் காட்சிகளில் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. இரண்டாம் பாதியிலும் அவ்வப்போது தலைகாட்டி, சிரிக்க வைக்கிறார். ஹரீஷ் பெராடியின் வில்லத்தனத்துக்குப் போதுமான காரணங்கள் இல்லாததால், பெரிதாக எடுபடவில்லை.
பாண்டியராஜன், உமா பத்மநாபன், சாண்ட்ரா, கலைராணி, ‘பசங்க’ சிவகுமார், பெரேரா ஆகியோர் கதைக்குத் தேவையானதைச் செய்துள்ளனர். சில இடங்களில் மட்டும் பாண்டியராஜன் உள்ளிட்ட தேர்ந்த நடிகர்களே ஓவர் ஆக்டிங் செய்ததைத் தவிர்த்திருக்கலாம்.
அதேபோல், சினிமாத்தனமான காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக, சில நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்து, எல்லா தேர்விலும் எக்ஸ்ட்ரா ஸ்கோர் எடுத்து, டி.ஐ.ஜி.யின் ரெக்கார்டையே வைபவ் முறியடிக்கும் காட்சி. திரைக்கதைக்குத் தேவையாக இருந்தாலும், வைபவ்வுக்கு அது பொருத்தமாக இல்லை என்பது பேருண்மை.
ஜி.ஆர்.என்.சிவா ஒளிப்பதிவில், அடர்ந்த காட்டின் தோற்றம் மிகப்பெரிய பயத்தை உண்டாக்குகிறது. பாடல்களில் ஜொலிக்காத விஷால் சந்திரசேகர், பின்னணி இசையில் ஓரளவு கவனிக்க வைக்கிறார்.
சென்டிமென்ட், காதல், திகில், காமெடி, க்ரைம் என எல்லா விஷயங்களையும் ‘கலக்கி’ ஊற்றியிருக்கிறார் அறிமுக இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம். இப்படிச் செய்திருப்பது திரைக்கதை உத்தியா அல்லது ஒரே ஜானரில் திரைக்கதையைக் கொண்டு செல்ல முடியாமல், அதைச் சமாளிக்க இந்த ஐடியாவா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
திடீரென ஜானர் மாறும் திரைக்கதை, ஏன் இப்படி? என யோசிக்க வைக்கிறது. ஆனால், அதற்குள்ளும் சிறிய ட்விஸ்ட்டை வைத்து, ஜஸ்ட் பாஸ் ஆகியுள்ளார் இயக்குநர். பெண் குரலால் நாயகன் படும் அவஸ்தைகளை மட்டுமே சுவாரசிமாகச் சொல்லியிருந்தாலே போதும். இந்த ‘டாணா’க்காரனுக்கு சல்யூட் அடித்திருக்கலாம்.
ஆனால், ..............
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT