Published : 24 Dec 2019 07:14 AM
Last Updated : 24 Dec 2019 07:14 AM
66-வது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளை நேற்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். சிறந்த நடிகைக்கான விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுக்கொண்டார்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விக்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கி சிறப்பித்தார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த தமிழ் படமாக 'பாரம்' தேர்வானது. சிறந்த இந்தி படமாக 'அந்தாதுன்' தேர்வு செய்யப்பட்டது. மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநடி (தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான படம்) படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுக்கொண்டார். அப்போது, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் காலில் விழுந்து கீர்த்தி சுரேஷ் வணங்கினார்.
சிறந்த தேசிய நடிகர்களுக்கான விருதை இந்தி நடிகர்கள் விக்கி கவுஷல், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ப்ரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கிய 'பாரம்' படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டது. விழாவில் பாரம் படக்குழுவினர் விருதை பெற்றுக் கொண்டனர்.
விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “இந்த ஆண்டு விருது பெற்ற பல படங்கள் உணர்வுபூர்வமான விஷயங்களுடன் சேர்த்து அறிவுபூர்வமான விஷயங்களையும் பேசியுள்ளன. வழக்கமான கதைகள், மூடநம்பிக்கைகளை தகர்க்கும்விதமான படங்கள் இந்த ஆண்டும் வந்துள்ளன. பழமை மரபுகளை உடைத்துவிட்டு, நவீன தீர்வுகளைச் சொல்லும் படங்களை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தந்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது” என்றார்.
சிறந்த நடிகை விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “மகாநடி படத்தில் நடித்ததற்காக எனக்கு பாராட்டுகள் வந்துள்ளதையடுத்து மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்குப் பிடித்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றதை பாக்கியமாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன்” என்றார்.
சிறந்த இயக்குநருக்கான விருதை ‘உரி’: ‘தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ இந்திப் படத்தை இயக்கியதற்காக ஆதித்யா தர் பெற்றார்.
பெண்களுக்கு சுயஅதிகாரம் வழங்குவதை வலியுறுத்திய ‘ஹெல்லாரோ’ குஜராத்தி படத்துக்கு விருது கிடைத்தது. சிறந்த பொழுதுபோக்கு படமாக பதாய் ஹோ படத்துக்கும், சிறந்த இந்திப் படமாக அந்தாதூன் படத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகர் விருது ஸ்வானந்த் கிர்கிரேவுக்கு (படம்: சம்பக்) வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதை விருது ராம் ராகவன், அரிஜித் பிஸ்வாஸ், பூஜா லதா சுர்ட்டி, ஹேமந்த் ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கு (படம்: பத்மாவத்) அளிக்கப்பட்டது. சிறந்த பின்னணிப் பாடகர் விருதை அரிஜித் சிங்கும், பாடகி விருதை பிந்து மாலினி நாராயணசாமியும் பெற்றனர்.
கன்னடப் படமான ‘ஒந்தல்ல எரடல்ல’ நர்கிஸ் தத் விருதைப் பெற்றது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பி.விரோஹித் (ஒந்தல்ல எரடல்ல), சமீப் சிங் ரணவத் (ஹர்ஜீத்தா), தல்ஹா அர்ஷத் ரேஷி (ஹமித்), நிவாஸ் போகலே (நால்) ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கியுள்ளார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment