Published : 13 Dec 2019 03:09 PM
Last Updated : 13 Dec 2019 03:09 PM

முதல் பார்வை: சாம்பியன்

தந்தையைக் கொன்ற வில்லனை மகன் பழிவாங்கத் துடிப்பதுதான் ‘சாம்பியன்’.

பள்ளி மாணவனான விஷ்வாவுக்கு, கால்பந்து விளையாடுவது என்றால் பயங்கர இஷ்டம். ஆனால், அவனுடைய அப்பா மனோஜ் கால்பந்து விளையாடும்போது இறந்ததால், அம்மா அவனைக் கால்பந்து விளையாட அனுமதிப்பதில்லை. ஆனாலும், அம்மாவுக்குத் தெரியாமல் விளையாடுகிறான்.

அவனுடைய திறமையைப் பார்த்து, கால்பந்து பயிற்சி அகாடமி ஒன்றில் கோச்சாக இருக்கும் நரேனிடம் அனுப்பி வைக்கிறார் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர். தன் நண்பன் மனோஜின் மகன்தான் விஷ்வா எனத் தெரிந்துகொள்ளும் நரேன், அவனிடம் சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்கிறார்.

அடுத்தகட்டப் போட்டிக்காகத் தயாராகும் நேரத்தில், அவனுடைய தந்தையின் மரணம் கொலை எனத் தெரிய வருகிறது. எனவே, வில்லனைப் பழிவாங்கத் துடிக்கிறார் விஷ்வா. நினைத்தபடி அவர் பழிவாங்கினாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.

விஷ்வாவுக்கு இதுதான் முதல் படம். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். பதின்பருவத்தில் இருக்கும் மாணவனின் கோபம், கால்பந்தின் மீதான ஆர்வம், காதல் என எல்லா உணர்வுகளையும் இயல்பாக ஜோன்ஸ் கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். நிஜமான கால்பந்து விளையாட்டு வீரராக இருப்பாரோ என்று நினைக்கும் அளவுக்கு, கால்பந்து விளையாட்டு தொடர்பான காட்சிகளில் சிரத்தையுடன் நடித்துள்ளார்.

சாந்தா கதாபாத்திரத்தில் பொறுப்பான கோச்சாக நடித்துள்ளார் நரேன். தன் நண்பனின் மகனின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதற்காகத் தன்னையே ஒப்புக் கொடுக்கும் அழுத்தமான கதாபாத்திரம். தனசேகர் கதாபாத்திரத்தில் வில்லனாக ஸ்டன்ட் சிவாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. கால்பந்து விளையாடிக்கொண்டே மனோஜைத் தீர்த்துக் கட்டுவது, அவரது கதாபாத்திரத்துக்கான புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

ஹீரோவின் அம்மாவாக ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் வாசவி. தன் மகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பரிதவிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மனோஜ், அவருடைய நண்பராக வரும் ‘பிச்சைக்காரன்’ வினோத் இருவரும் கதைக்குத் தேவையானதைக் கொடுத்துள்ளனர்.

ஹீரோயின்களாக நடித்துள்ள மிருணாளினி, செளமிகா இருவரும் படத்தில் தலைகாட்டியுள்ளனர். இந்தத் திரைக்கதைக்கு ஹீரோயின்கள் தேவையில்லை என்றாலும், கமர்ஷியல் அம்சத்துக்காகச் சேர்த்துள்ளனர். ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் நீளத்தை அதிகப்படுத்த உதவியிருக்கிறதே தவிர, திரைக்கதைக்கு மைனஸ்தான். அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால், சுவாரசியமாக இருந்திருக்கும்.

அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என எல்லோராலும் எளிதில் கணித்துவிடக்கூடிய திரைக்கதை அப்படியே நடப்பது சலிப்பைத் தருகிறது. ஏற்கெனவே அரைத்த மாவையே மறுபடியும் அரைத்திருப்பதால், திரைக்கதையில் எந்த சுவாரசியமும் இல்லை.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, உறுத்தாத வண்ணம் இருக்கிறது. அரோல் கரோலியின் இசையில் எந்தப் பாடலுமே மனதில் பதியவில்லை. ஒருசில இடங்களில் ரசிக்கவைத்த பின்னணி இசை, பல காட்சிகளில் சத்தம் அதிகமாக இருக்கிறதோ என்ற உணர்வை உண்டாக்கியது.

‘சாம்பியன்’ எனத் தலைப்பு வைத்தாலும், விளையாட்டு தொடர்பான காட்சிகள் மிகக் குறைவாகவே உள்ளன. அதைவிட, ரவுடியிஸம், பழிவாங்கல் சம்பந்தப்பட்ட காட்சிகளே அதிகம் உள்ளன.

அதேசமயம், மாணவன் கையில் கத்தி இருக்கக்கூடாது என்பதையும் ‘சாம்பியன்’ மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x