Published : 04 Dec 2019 04:32 PM
Last Updated : 04 Dec 2019 04:32 PM

’’வீட்டுக்கு தெரியாம ‘சிகப்பு ரோஜாக்கள்’ல நடிச்சேன்; செம அடி வாங்கினேன்’’ - நடிகை வடிவுக்கரசி பிரத்யேகப் பேட்டி

வி.ராம்ஜி

’’வீட்டுக்கு தெரியாம ‘சிகப்பு ரோஜாக்கள்’ல நடிச்சேன்; செம அடி வாங்கினேன்’’ என்று நடிகை வடிவுக்கரசி பிரத்யேகப் பேட்டி அளித்தார்.

நடிகை வடிவுக்கரசி, தன் திரையுலக அனுபவங்களை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பிரத்யேகமாக வீடியோ பேட்டி அளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:


வேலூர் பக்கம் இருக்கிற ராணிபேட்டைதான் சொந்த ஊர். எங்கள் அப்பா சண்முகம். சினிமா ஆசை அவருக்கு. சினிமாவுக்கு பைனான்ஸ் செய்துகொண்டிருந்தார். அவ்வப்போது சின்னச் சின்ன வேடங்களில் சினிமாவில் தலைகாட்டிவந்தார்.


ஆனால் ஒருகட்டத்தில் தடாலென்று கீழே விழுந்தோம். சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தோம். பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜன், என்னுடைய பெரியப்பா. அதாவது என் அம்மாவின் அக்காவுடைய கணவர். ஆனாலும் நாங்கள் சினிமா பார்க்க தியேட்டருக்கெல்லாம் போவது என்பது அரிது. சென்னைக்கு வந்து படிப்பைத்தொடர்ந்தேன். ஆனால் முழுமையாகப் படிக்கமுடியவில்லை. பியுசி வரைதான் படித்தேன். குடும்பச் சூழ்நிலை அப்படி.


அதனால் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது தூர்தர்ஷனில் ‘கண்மணிப்பூங்கா’ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். ஒரு நிகழ்ச்சிக்கு 75 ரூபாய் தருவார்கள். அதேபோல் பள்ளி ஒன்றில் டீச்சராக, 75 ருபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தேன்.
அதேசமயத்தில், புடவைக்கு டிசைன் பண்ணுகிற கடையிலும் வேலை பார்த்தேன். அந்த முதலாளிதான் ‘கன்னிமாரா ஹோட்டலில் ஆள் தேவை’ என்று சொல்லி அப்ளை பண்ணச் சொன்னார். பிறகு அந்த ஹோட்டலில் வேலை பார்த்தேன்.


இந்தசமயத்தில்தான், ஏற்கெனவே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘பாரதிராஜா இயக்கும் படம். நடிக்கிறீங்களா?’ என்று கேட்டார்கள். அது ‘கிழக்கே போகும் ரயில்’ படத்துக்கான வாய்ப்பு. ஆனால் ‘ரொம்ப ஒல்லியா இருக்குப்பா இந்தப் பொண்ணு’ என்றார்கள். நானும் அதுபற்றியெல்லாம் எந்த நினைப்பும் இல்லாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்போது, கன்னிமாரா ஹோட்டல் வேலை, வாரந்தோறும் டிடியில் ‘கண்மணிப்பூங்கா’ நிகழ்ச்சி என ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை. அப்போது ஒருநாள், ‘உன் அப்பா வந்திருக்கிறார், உன்னைப்பார்க்க’ என்று ஹோட்டலில் சொன்னார்கள். அவர் இங்கெல்லாம் வரமாட்டாரே என்று யோசித்தபடி சென்றேன். தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. சாரும் அவரின் மேனேஜரும் வந்திருந்தார்கள். ‘பாரதிராஜா அடுத்த படம் எடுக்கிறார். அதில் ஒரு ரெண்டு சீன் நடிக்கவேண்டும். அதுவும் கமல் சாருடன் நடிக்கவேண்டும்’ என்று கேட்டார். நான் மறுத்தேன்.


ஆனால் என்னுடன் தூர்தர்ஷனில் வேலை பார்த்தவர்கள், ‘எல்லோரும் ஒரு ஆல்பத்தை வைத்துக்கொண்டு சினிமாவில் சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு தானாகவே தேடி வந்திருக்கிறது. மறுக்காமல் நடி’ என்றார்கள்.


நடிக்கப் போகிறேன் என்று வீட்டில் சொல்வதற்கு பயம். வேலைக்குப் போவதாகச் சொல்லிவிட்டு, நடிக்கச் சென்றேன். மேக்கப் போட்டார்கள். புருவத்தை எடுத்தார்கள். எதுவும் எனக்குத் தெரியாது. கமல் சாருடன் நடித்தேன். அங்கேயும் பயம். ‘நீ ஏ.பி.நாகராஜன் சார் பொண்ணுதானே’ என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று தவித்துக்கொண்டிருந்தேன். பிறகு நடித்துவிட்டு வந்துவிட்டேன். பாக்யராஜ் சார்தான் வசனமெல்லாம் சொல்லிக் கொடுத்தார். அந்தப் படம்தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. 1978ம் ஆண்டு வெளியானது.


மறுநாள் கண்ணாடியைப் பார்த்தால், புருவத்தைக் காணோம். நான் நெற்றியில் கைவைத்தபடியே வேலைக்குச் சென்றேன். அம்மாவின் கண்ணில் படாமல் தப்பித்தபடி இருந்தேன். ஒருநாள்... ’படத்தில் இன்னொரு சீன் நடிக்கவேண்டும். அந்த வடிவுக்கரசியைக் கூட்டிக்கிட்டு வா’ என்று பாரதிராஜா ஆளனுப்பினார். அவர்கள் என் வீட்டுக்கு வந்து, என் பேரைச் சொல்லி, ‘நடிக்கக் கூப்பிடுறார் டைரக்டர் சார்’ என்று சொல்ல, என் அப்பா எந்தப் பதட்டமும் இல்லாமல், ‘என் பொண்ணு நடிக்கறதெல்லாம் செய்யாதுங்க. அதோ... நாலு வீடு தள்ளி டிராமால நடிக்கிற பொண்ணு இருக்குங்க. ஒய்.ஜி.பி. நாடகத்துல நடிக்கிறாங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.


பிறகு வந்தவர்கள் ஆபீஸ் சென்று டைரக்டரிடம் சொல்ல, ‘யோவ்... போட்டோ எடுத்துக்கிட்டுப் போய் கேளுங்கய்யா’ என்று சத்தம் போட்டார். படப்பிடிப்பில், நானும் கவுண்டமணியும் இணைந்து நடித்ததைப் புகைப்படம் எடுத்திருந்தார்கள். அதேபோல், கமல் சார் இருக்கும் கதவைத் திறந்துகொண்டு, தோளில் ஸ்டைலாகப் பையை மாட்டிக்கொண்டு வருவேன். அந்தப் படங்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். ‘இதோ... இந்தப் பொண்ணுதான்’ என்று காட்டினார்கள்.


அவ்வளவுதான். அப்பா கடும் கோபத்தில் இருந்தார். நான் வேலை முடிந்து வந்தேன். விஷயத்தையெல்லாம் சொல்லி கேட்டார். இல்லையென்று சொன்னேன். போட்டோக்களைக் காட்டினார். வேறு வழியே இல்லாமல், ஆமாம் என்று தலையசைத்தேன். செம அடி கிடைத்தது எனக்கு. ‘நான் தூக்குல தொங்குறேன்’ என்று அப்பா கத்த, அம்மா அழுது தடுக்க... ஒரே களேபரம்.


இவ்வாறு நடிகை வடிவுக்கரசி, தான் திரைத்துறைக்கு வந்த அனுபவங்களை சுவைபடப் பகிர்ந்துகொண்டார்.


‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு வடிவுக்கரசி அளித்த பிரத்யேக வீடியோ பேட்டியைக் காண :

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x