Published : 21 Nov 2019 12:20 PM
Last Updated : 21 Nov 2019 12:20 PM
வி.ராம்ஜி
’’வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ பாட்டுக்கு எங்களுடன் சேர்ந்து ரஜினியும் பிராக்டீஸ் செய்தார். அந்தப் பாடலை இப்போது பார்க்கும் போது, ‘நாம இன்னும் கொஞ்சம் நல்லாப் பண்ணியிருக்கலாமோ’ என்று தோன்றும்’’ என்று மனம் திறந்து பேட்டி அளித்தார் நடிகர் சிவச்சந்திரன்.
இயக்குநர் கே.பாலசந்தரின் ‘பட்டினப்பிரவேசம்’ மூலம் அறிமுகமாகி, நடிகராக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக, இயக்குநராக வலம் வந்தவர் நடிகர் சிவச்சந்திரன்.
‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்காக சிவச்சந்திரன் பிரத்யேகப் பேட்டி அளித்தார். அவர் முதன் முதலில் தந்த வீடியோ பேட்டியும் இதுவே!
அந்தப் பேட்டியில் சிவச்சந்திரன் கூறியதாவது:
‘’நடிகனாக வேண்டும் என்று ஆசைப்படவே இல்லை. ஆனால் சினிமாப் பைத்தியம் என்றுதான் என்னைச் சொல்லவேண்டும். எனக்கு சொந்த ஊர் கோவைப் பக்கமுள்ள வால்பாறை. கல்லூரிப் படிப்பு சென்னை லயோலாவில்தான்.
அந்த சமயத்தில், ‘நடிகர்கள் தேவை’ என்று நாளிதழில் விளம்பரம் வந்திருந்தது. சரி போய்ப் பார்க்கலாமே என்று போனேன். என்னை ஓகே செய்தார்கள். என் பெயரை சிவச்சந்திரன் என்று மாற்றினார்கள். சிவாஜியின் பெயர், எம்ஜிஆரின் பெயர்... இரண்டையும் இணைத்து, சிவச்சந்திரன் என்று வைத்தார்கள். எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் படம் எடுத்தார்கள். நடித்தேன். ஆனால் சிலபல காரணங்களால், படம் டிராப் செய்யப்பட்டது.
அதன் பிறகு, மதி ஒளி சண்முகம் மூலமாக, கே.பாலசந்தரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது புதுமுகங்களை வைத்து படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார் பாலசந்தர். ‘பட்டினப்பிரவேசம்’ படம். என்னை நடிக்கச் சொன்னார். நானே டயலாக் எழுதி, நடித்தேன். என்னைப் பிடித்துப் போனது.
அந்தப் படத்தில் உள்ள ‘வான் நிலா நிலா அல்ல’ பாட்டு அருமையான பாட்டு. இசை, எஸ்.பி.பி. சாரின் குரல் எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால், அந்தப் பாடலை இப்போது பார்க்கும்போது, ‘இன்னும் நன்றாக நடித்திருக்கலாமோ’ என்று தோன்றுகிறது. நடிப்பு புதுசு. ஒரு பயம் வேறு. நடந்துகொண்டே நடிக்கவேண்டும். மணலில் நடக்கவேண்டும். இதெல்லாம் புது அனுபவமாக இருந்தது எனக்கு.
’பட்டினப்பிரவேசம்’ படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, ‘மூன்று முடிச்சு’ படத்தையும் எடுத்துக் கொண்டிருந்தார் பாலசந்தர். இரண்டும் ஒரே கம்பெனி. அதனால், அந்த அலுவலகத்துக்குச் செல்லும்போது, அங்கே ரஜினியும் இருப்பார்.
அங்குதான் ரஜினியுடன் பழக்கம் ஏற்பட்டது. அங்கே நடிப்புப் பயிற்சியில் ஈடுபடுவோம். இரண்டு படங்களுக்குமான வேலைகள் ஒரேசமயத்தில் நடந்துகொண்டிருந்தது. ரஜினி ‘பட்டினப்பிரவேசம்’ படத்தில் உள்ள காட்சிகளையும் நடித்துப் பார்ப்பார். ‘வான் நிலா நிலா அல்ல’ பாட்டுக்கு நடிப்பார். திடீரென்று காணாமல் போய்விடுவார். பார்த்தால், பாத்ரூமில் உள்ள பாதரசம் போன கண்ணாடிக்கு எதிரே நின்று கொண்டு, தலைமுடியைக் கோதிவிட்டுக்கொள்வார். கலைத்துக்கொள்வார். நடிப்பார். வசனம் பேசி பார்த்துக் கொள்வார்.
அவரின் கடுமையான ஈடுபாடும் உழைப்பும்தான் இன்றைக்கு ரஜினியை மிகப்பெரிய உயரத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறது.
இவ்வாறு சிவச்சந்திரன் தெரிவித்தார்.
நடிகர் சிவச்சந்திரனின் முழு வீடியோ பேட்டியைக் காண :
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment