Published : 19 Nov 2019 08:09 PM
Last Updated : 19 Nov 2019 08:09 PM
படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அடுத்தடுத்து புகைப்படங்கள் லீக்காவதால், அப்செட்டில் உள்ளது ‘தளபதி 64’ படக்குழு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 64-வது படம் என்பதால், தற்போதைக்கு ‘தளபதி 64’ என அழைக்கப்பட்டு வருகிறது. சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின்ராஜ் எடிட் செய்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு புதுடெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் (2020) ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதால், தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பொதுவாக, விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்புத் தளங்களில் கெடுபிடி அதிகமாக இருக்கும். படப்பிடிப்பில் இருந்து யாரும் புகைப்படமோ, வீடியோவோ எடுத்து வெளியில் பரப்பிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர். ஆனால், அதையெல்லாம் தாண்டி எப்படியாவது புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
அதிலும், விஜய் படங்களின் நிலையோ ரொம்ப மோசம். ‘சர்கார்’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள், பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியாகி, சம்பந்தப்பட்டப் படக்குழுவினருக்கு சிக்கலைக் கொடுத்தது. எனவே, அடுத்தடுத்து அவருடைய படங்களில் கெடுபிடி அதிகரிக்கப்பட்டது. ஆனாலும், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்கள் லீக்காவதை யாரும் தடுக்க முடியவில்லை.
‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடங்கிய 6-வது நாளிலேயே படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. இதில், விஜய் பனியனுடன் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, மேள தாளத்துக்கு கும்பலுடன் நடனமாடுவது, நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதனால் அதிர்ச்சியான படக்குழு, படப்பிடிப்புத் தளத்தில் செல்போன் கொண்டுவர தடை விதித்தது.
இருந்தாலும், தற்போது விஜய்யின் 3 புகைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில், கட்டம் போட்ட சட்டையுடன், கல்லூரி அடையாள அட்டை அணிந்து ஸ்டூலில் அமர்ந்திருப்பது, பெஞ்சில் படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இன்னொரு புகைப்படம், கையை முறுக்கியபடி, கையில் போட்டிருக்கும் காப்பை இழுத்துவிடுவதாக அமைந்துள்ளது.
இப்படி அடுத்தடுத்து புகைப்படங்கள் லீக்காவதால், அப்செட்டில் உள்ளது ‘தளபதி 64’ படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment