Published : 17 Nov 2019 02:38 PM
Last Updated : 17 Nov 2019 02:38 PM
வி.ராம்ஜி
சிவாஜியுடன் ஜெயலலிதா 68-ம் வருடத்தில் இணைந்தார். அந்த வருடத்தில் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தார். எம்ஜிஆருடன் எட்டுப் படங்களில் நடித்திருந்தார்.
1965-ம் வருடம், பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் உருவான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடிக்கத் தொடங்கினர். 1968ம் ஆண்டு இந்த ஜோடி, எட்டு படங்களில் நடித்தது. அந்த வருடத்தில், எம்ஜிஆர் எட்டுப் படங்களில் நடித்தார். எட்டிலும் ஜெயலலிதாதான் ஜோடி.
அதே 1968-ம் ஆண்டில், சிவாஜிகணேசனுடன் முதன்முதலாக இணைந்து நடித்தார் ஜெயலலிதா. அந்த வருடத்தில் சிவாஜி, எட்டுப் படங்களில் நடித்தார். உயர்ந்த மனிதன், ஹரிச்சந்திரா, எங்க ஊர் ராஜா, என் தம்பி, கலாட்டா கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், திருமால் பெருமை லட்சுமி கல்யாணம் ஆகிய எட்டுப் படங்களில் நடித்தார்.
இதில், கொத்தமங்கலம் சுப்பு எழுதி, ஏபி.நாகராஜன் இயக்கிய ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை விவரிக்க வேண்டுமா என்ன? சிவாஜி, பத்மினி, பாலையா, பாலாஜி, நம்பியார், நாகேஷ், தங்கவேலு, ஏவிஎம்.ராஜன் முதலானோர் நடித்த அந்தப் படம் ஏற்படுத்திய வெற்றியும் மக்களுடன் இரண்டறக் கலந்த விதமும் நூற்றாண்டு கடந்தும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். சிக்கல் சண்முகசுந்தரத்தையும் மோகனாம்பாளையும் வைத்தியையும் காலம் கடந்தும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அடுத்து... ‘உயர்ந்த மனிதன்’. ஏவிஎம் படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம். செளகார் ஜானகி, வாணிஸ்ரீ, பாரதி, சிவகுமார், மேஜர் சுந்தர்ராஜன், அசோகன் முதலானோர் நடித்த படம். சிவாஜியின் 125வது படம்.
சிவாஜிக்கும் ஏவிஎம்மிற்கும் சண்டையே இல்லாமல் ஓர் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியை நிரப்பும் விதமாக அமைந்ததுதான் ‘உயர்ந்த மனிதன்’. ‘அப்பச்சிகிட்ட சொல்லுங்க... சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’ என்று சிவாஜியே சொன்ன பிறகு அப்பீல் என்ன?
அதேபோல், படத்தின் உரிமையை வாங்கிவைத்து, அதை சிவாஜிக்குப் போட்டுக்காட்டினார்கள். படம் பார்த்துவிட்டு, ‘அந்த டாக்டர் கேரக்டர்ல நான் நடிக்கிறேனே’ என்றார் சிவாஜி. ‘அப்போ ஹீரோவுக்கு நாங்க என்ன செய்றது? அந்த டாக்டர் கேரக்டர்ல அசோகன் நடிக்கிறார்’ என்று ஏவிஎம் தரப்பில் சொல்லப்பட்டது. சம்மதித்தார். இத்தனைக்கும் அசோகனும் சிவாஜியும் அப்போது பேசிக்கொள்வதில்லை. அதேபோல், முக்கியமான காட்சியில் அசோகன் எப்படி நடித்தால் நன்றாக இருக்கும் என சிவாஜி நடித்துக் காட்டினார்.
இன்னொரு முக்கிய விஷயம்... பத்துபைசா கூட அட்வான்ஸ் வாங்காமல் சிவாஜி நடித்துக் கொடுத்தார். படமும் பாடல்களும் செம ஹிட்டு. ‘அந்தநாள் ஞாபகம்’, ‘நாளை இந்த வேளை பார்த்து’, ‘வெள்ளிக்கிண்ணம்தான்’, என் கேள்விக்கென்ன பதில்’ என எல்லாப் பாடல்களும் பிரமாதமாக அமைந்தன.
அடுத்து கே.பாலாஜியின் தயாரிப்பில், ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வந்தது ‘என் தம்பி’. சரோஜாதேவி ஜோடி. அதேபோல், பி.மாதவன் இயக்கத்தில், சிவாஜி, செளகார் ஜானகி, ஜெயலலிதா நடித்த ‘எங்க ஊர் ராஜா’ படமும் ஹிட்டடித்தது. சிவாஜியின் நடிப்பு அபாரம். ‘யாரை நம்பி நான் பொறந்தேன்’ பாடலே, இந்தப் படத்தைத் தூக்கிக்கொண்டு போய் நிறுத்தியது.
சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், சிவாஜி, ஜெயலலிதா, நாகேஷ், மனோரமா, வி.கோபாலகிருஷ்ணன், ஏவிஎம்.ராஜன், தங்கவேலு முதலானோர் நடித்த ‘கலாட்டா கல்யாணம்’ இந்த வருடத்தில், ஏப்ரல் 12-ம் தேதி வெளியானது. சிவாஜியுடன் ஜெயலலிதா முதன்முதலாக இணைந்தது இந்தப் படத்தில்தான்.
இதற்காகவே கவிஞர் வாலியிடம் சிவாஜி, ‘அந்தப் பொண்ணு அங்கேருந்த பொண்ணு. நம்மகிட்ட இந்தப் படத்துல வந்துருக்கு. அதுக்கேத்த மாதிரி லைன் போடுங்க’என்று சொல்ல... அப்படி வாலி எழுதிய பாடல்தான்... ‘நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகாராணி.’ கலகலப்புக்குப் பஞ்சமில்லாத ‘கலாட்டா கல்யாணம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘திருமால் பெருமை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பத்மினி, கே.ஆர்.விஜயா முதலானோர் நடித்திருந்தனர். சிவனின் பெருமையைச் சொன்ன ‘திருவிளையாடல்’ போல், விஷ்ணுவின் பெருமை சொன்ன ‘திருமால் பெருமை’யும் வெற்றி பெற்றது.
கே.எஸ்.பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் வரலட்சுமி, நம்பியார், பாலையா, தங்கவேலு முதலானோர் நடிக்க, சிவாஜி நடித்த ‘ஹரிச்சந்திரா’ படம் இந்த வருடம்தான் வெளியானது.
கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில், ஜி.ஆர்.நாதன் இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘லட்சுமி கல்யாணம்’ நவம்பர் 15- ம்தேதி வெளியானது. செளகார்ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா முதலானோர் நடித்திருந்தனர்.
68-ம் வருடம் சிவாஜிக்கு எட்டு படங்கள் வந்தன. இதில், ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘உயர்ந்த மனிதன்’, ’எங்க ஊர் ராஜா’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘திருமால் பெருமை’ என ஐந்து படங்களும் அதிக நாட்கள் ஓடின. நல்ல வசூலைக் குவித்தன.
இந்த 68-ம் ஆண்டில் ஆச்சரியம்... எம்ஜிஆரும் எட்டுப் படங்கள். சிவாஜியும் எட்டுப் படங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT