Published : 15 Nov 2019 03:21 PM
Last Updated : 15 Nov 2019 03:21 PM
வி.ராம்ஜி
எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் நடித்த படங்கள் வந்தாலும் ஆதிபராசக்தி திரைப்படம்தான் மிகப்பெரிய வசூலைக் குவித்தது.
1971ம் ஆண்டு, எம்ஜிஆரும் சிவாஜியும் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த காலம். அன்றைக்கும் அவர்கள்தான் வசூல் சக்கரவர்த்திகள். தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே இருந்தார்கள்.
இந்த வருடத்தில், எம்ஜிஆர் நான்கு படங்களில் நடித்தார். இந்த நான்கில் மூன்று படங்களை இயக்கியவர் யாரென்று சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்துவிடும். ஆமாம்... எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் ப.நீலகண்டன் தான் அவர். இவர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்து மூன்று படங்கள் வெளியாகின.
1971-ம் ஆண்டு, ஜனவரி 26-ம் தேதி ப.நீலகண்டன் இயக்கத்தில் ‘குமரிக்கோட்டம்’ வெளியானது. கோவை செழியன் தயாரித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா,லட்சுமி, சோ, சச்சு, அசோகன், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நடித்திருந்தனர். ’எங்கே அவள்...’, ‘நாம் ஒருவரையொருவர் சந்திப்போம் என...’, ’என்னம்மா ராணி பொன்னான மேனி’ என்று பாடல்கள் எல்லாமே ஹிட். எம்.எஸ்.வி,தான் இசை. வண்ணப்படம்.
அடுத்து, சத்யா மூவிஸ் தயாரிப்பில்,எம்.கிருஷ்ணன் இயக்கத்தில், ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம் மே 29-ம் தேதியன்று ரிலீசானது. இந்தப் படத்தை யாரால்தான் மறக்கமுடியும்? மஞ்சுளா, பத்மினி, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன் என பலரும் நடித்திருந்தனர். ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’, ‘கடலோரம் வாங்கிய காற்று’, ‘அழகிய தமிழ் மகள்’, ’பம்பை உடுக்கை கட்டி’ என்ற பாடல்களும் மஞ்சுளாவின் கவர்ச்சியும் எம்ஜிஆருக்கு மத்திய அரசு வழங்கிய ‘பாரத்’ பட்டமும் என படத்தின் ஹைலைட்டை சொல்லிக்கொண்டே போகலாம்.
71-ம் வருடம், அக்டோபர் 18-ம் தேதி ப.நீலகண்டன் இயக்கத்தில், ‘நீரும் நெருப்பும்’ திரைப்படம் வெளியானது. ஜெயலலிதாதான் ஜோடி. இதிலும் பாடல்கள் சூப்பர். ஆனால் படம்தான் சறுக்கியது. எம்ஜிஆர் டபுள் ஆக்ட் கொடுத்திருந்தார். எம்.எஸ்.வி.தான் இசை. கலர் படம்.
அதன் பின்னர், ப.நீலகண்டன் இயக்கத்தில், எம்ஜிஆர், முத்துராமன், ஜெயலலிதா நடித்த ‘ஒருதாய்மக்கள்’ டிசம்பர் 9-ம் தேதி வெளியானது. இதிலும் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. கருப்பு வெள்ளைப்படம். ஆக, எம்ஜிஆர் நடித்த 4 படங்களில் மூன்று படங்கள் ப.நீலகண்டன் இயக்கியவை. எம்ஜிஆருடன் ஜெயலலிதா மூன்று படங்களில் நாயகி. மூன்று படங்கள் வண்ணப்படங்கள். இதில், ‘ரிக்ஷாக்காரன்’தான் மிகப்பெரிய ஹிட்.
அடுத்து... சிவாஜி கணேசன்.
71-ம் ஆண்டு, எம்ஜிஆருக்கு 4 படங்கள் வந்தன. ஆனால் சிவாஜிக்கோ 9 படங்கள் வெளியாகின. எஸ்.ராமநாதன் இயக்கத்தில், பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில், முத்துராமன், பத்மினியுடன் நடித்த ‘இருதுருவம்’ 71-ம் ஆண்டு, ஜனவரி 14-ம் தேதி வெளியானது. மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது இந்தப் படம். இது, ரீமேக் படம் என்பார்கள்.
அடுத்து, முக்தா பிலிம்ஸில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில், ஜெயலலிதாவுடன் நடித்த ‘அருணோதயம் வெளியானது. பாடல்களும் செம ரகம். படமும் கலகலப்பாகத்தான் போனது. ஆனாலும் சுமாராகத்தான் ஓடியது.
அதே மார்ச் மாதத்தில், 26-ம் தேதி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், ‘குலமா குணமா’ படம் வெளியானது. பாடல்கள் தேவலாம். படமும் பரவாயில்லை ரகம்.
இதன் பிறகு, ஏப்ரல் 14-ம் தேதி, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில், இரண்டு சிவாஜி படங்கள் வந்தன. சாவித்திரி நடித்து, தயாரித்து, இயக்கிய ‘பிராப்தம்’ வெளியானது. படம் படுதோல்வி. பெருத்த நஷ்டத்தைக் கொடுத்தது சாவித்திரிக்கு!
இதேநாளில், சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், ‘சுமதி என் சுந்தரி’ வெளியானது. ஜெயலலிதா நாயகி. எல்லாப் பாடல்களும் ஹிட். எஸ்.பி.பி. முதன்முதலாக சிவாஜிக்கு ‘பொட்டு வைத்த முகமோ’ பாடினார்.
ஜூலை 22-ம் தேதி பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி, கே.ஆர்.விஜயா. பத்மினி நடித்து, பி.மாதவன் இயக்கத்தில் ‘தேனும் பாலும்’ வெளியானது. பாடல்களும் பரவாயில்லை. படமும் சுமார் ரகம்.
ஆகஸ்ட் 14ம் தேதி, சிவாஜி, நாகேஷ், முத்துராமன் நடித்த ‘மூன்று தெய்வங்கள்’ ரிலீசானது. தாதா மிராஸி இயக்கினார். முன்னதாக, டி. யோகானந்த் இயக்கத்தில், ;தங்கைக்காக’ வெளியானது. ஜூலை மாதம் 3-ம் தேதி, மல்லியம் ராஜகோபால் இயக்கி, ஜெயலலிதா நடித்த ‘சவாலே சமாளி’ வெளியானது. இந்தப் படத்தில் அமைந்த ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது’, ‘சிட்டுக்குருவிக்கென கட்டுப்பாடு’ உள்ளிட்ட பாடல்கள் மனதைத் தொட்டன.
‘இதோ எந்தன் தெய்வம்’ என்ற பாடலைக் கொண்ட ‘பாபு’ திரைப்படம், அக்டோபர் 18-ம் தேதி வெளியானது. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார்.
ஆக, 71-ம் ஆண்டில், ’அருணோதயம்’, ’இருதுருவம்’, ‘குலமா குணமா’, ‘சவாலே சமாளி’, ‘சுமதி என் சுந்தரி’, ‘தங்கைக்காக’, ‘தேனும் பாலும்’, ‘பிராப்தம்’, ‘மூன்று தெய்வங்கள்’ என ஒன்பது படங்கள் வந்தன. இதில், ‘அருணோதயம்’, ‘தங்கைக்காக’, ‘தேனும் பாலும்’ ஆகிய படங்கள் சுமாராக ஓடின. ‘குலமா குணமா’, ’சவாலே சமாளி’, ’சுமதி என் சுந்தரி’, ‘மூன்று தெய்வங்கள்’ வெற்றிப்படங்கள். ‘பிராப்தம்’ மிகப்பெரிய தோல்வி. ’பாபு’ திரைப்படம் சுமாரான படமும் இல்லை; வெற்றிப் படமாகவும் அமையவில்லை.
இதில் சுவாரஸ்யம்... 71-ம் வருடம், அக்டோபர் 18- ம் தேதி சிவாஜி நடித்த ‘பாபு’, எம்ஜிஆர் நடித்த ‘நீரும் நெருப்பும்’, ஜெய்சங்கர் நடித்த ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. மேலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘ஆதிபராசக்தி’ திரைப்படமும் வெளியானது. இதில், ‘பாபு’வை விட, ‘நீரும் நெருப்பும்’ படத்தை விட, ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’யை விட ‘ஆதிபராசக்தியே செம கலெக்ஷனை வாரிக் குவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT