Published : 15 Nov 2019 02:55 PM
Last Updated : 15 Nov 2019 02:55 PM
'சங்கத்தமிழன்' பிரச்சினை தீராத பிரச்சினை என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தமிழன்'. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ள லிப்ரா நிறுவனம், நவம்பர் 15-ம் தேதி வெளியீடு என அறிவித்தது.
படத்தின் பொருட்செலவு அதிகம், 'வீரம்' வரிச்சலுகை பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்தப் படத்தின் மீது இருப்பதால் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. 2 நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவுமே எட்டப்படவில்லை. இதனால், படம் திட்டமிட்டவாறு இன்று (நவம்பர் 15) வெளியாகவில்லை.
இதனிடையே தமிழக அரசு, நடிகர்களுக்குக் கலைமாமணி விருது அறிவித்தது. அந்த விருதுகளை அளிக்கும் விழாவில் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு தங்களது விருதுகளைப் பெற்றுக் கொள்ளவில்லை. இதனால் சர்ச்சை உருவானது. ஆனால், அன்றைய தினம் விஜய் சேதுபதி சென்னையில் இல்லை என்பதால் விருதினைப் பெற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி, யுகபாரதி உள்ளிட்டோர் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜனிடமிருந்து கலைமாமணி விருது பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் விஜய் சேதுபதி பேசும்போது, "கலைமாமணி விருது கொடுத்த அன்று படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. ஆகையால் இன்று கொடுத்தார்கள். இதைக் கொடுத்த தமிழக அரசுக்கும், இயல் - இசை மன்றத்துக்கும் மிக்க நன்றி. அமைச்சர் பாண்டியராஜன் சாருக்கும் நன்றி" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, "'சங்கத்தமிழன்' வெளியீட்டுக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதே..." என்ற கேள்விக்கு, "அது எத்தனை முறை சொன்னாலும் தீராத பிரச்சினை. அதை உங்களிடம் சொல்லியும் ஆகப் போவதில்லை" என்று பதிலளித்தார் விஜய் சேதுபதி.
மண்டி ஆப் விளம்பரப் பிரச்சினை மற்றும் ஐஐடி மாணவி தற்கொலை உள்ளிட்ட எந்தக் கேள்விக்கும் விஜய் சேதுபதி பதில் அளிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT