Last Updated : 10 Jul, 2015 05:25 PM

 

Published : 10 Jul 2015 05:25 PM
Last Updated : 10 Jul 2015 05:25 PM

முதல் பார்வை: பாகுபலி - தென்னகத்தின் கம்பீர சினிமா!

'நான் ஈ' படத்துக்குப் பிறகு ராஜமௌலி குழுவின் மூன்று ஆண்டு கால உழைப்பில் உருவாகி இருக்கும் படம் 'பாகுபலி'.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என்று ஒரு பெரும்படையே நடித்திருக்கும் படம். மரகதமணி, செந்தில்குமார், சாபுசிரில், பீட்டர் ஹெய்ன் என்று அத்தனை கலைஞர்களும் ஒன்றிணைந்து உழைத்த படைப்பு.

இந்த காரணங்களே பாகுபலி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தன.

ராஜமௌலியின் 11-வது படமான 'பாகுபலி', தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?

நம்பிக்கை துரோகத்தால் அரசன் (பிரபாஸ்) கொல்லப்படுகிறான். அரசன் மகன் என்ற எந்த அடையாளமும் இல்லாமல் மலைப்பகுதியில் சாதாரணமாக வளர்கிறான் இளவரசன் (அதுவும் பிரபாஸ்). காதலிக்காக (தமன்னா), அரசன் மனைவியை (அனுஷ்கா) காப்பாற்ற சபதம் எடுக்கிறான். அவர்தான் தன் அம்மா என்பதை தெரிந்து கலங்குகிறான். தன் வரலாறு அறிந்துகொள்ளும் தருணம் கனிகிறது. நடந்தது என்ன? என்று காட்சிகளால் விரிவதே 'பாகுபலி' முழுக் கதை.

புராணம், இதிகாசம், சரித்திரக் கதைகளில் நமக்குப் பழக்கப்பட்ட வழக்கமான கதைதான். ஆனால், அதில் நம்பிக்கை துரோகம், வன்மம் எந்த அளவு ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்பதை ரத்தமும் சதையுமாக சொன்ன விதத்தில் 'பாகுபலி' கவனம் ஈர்க்கிறான்.

டைட்டில் கார்டு போடும்போது ராஜமௌலி, பிரபாஸ், சத்யராஜ் பெயரைப் பார்த்ததும் அப்ளாஸ் அள்ளியது. தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபாஸூக்கு அவ்வளவு வரவேற்பு இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட முடிந்தது.

படம் தொடங்கியதும், தியேட்டர் முழுக்க நிசப்தம். ரசிகர்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் படம் பார்க்கத் தொடங்கினர். எமோஷன், சென்டிமென்ட்டை படம் நெடுக இழையோட விட்டு ஆக்‌ஷன், ரொமான்ஸை சரியாக பதிவு செய்த விதத்தில் ராஜமௌலி தேர்ந்த இயக்குநராக மிளிர்கிறார்.

எல்லா தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கி காட்சிகளாக விரியும்போது, தான் ஒரு கச்சிதக்காரன் (ஃபெர்பக்‌ஷனிஸ்ட்) என்பதை நிரூபித்திருக்கிறார்.

இரட்டை வேடங்களில் பிரபாஸ் அசத்தல். தினவெடுத்த தோள்கள், கூர்மையான பார்வை, தவறு நடக்கிறது என்பதை தெரிந்த பிறகும் சின்ன புன்னகையால் கடப்பது, போர் வியூகம் வகுப்பது, கண்களில் தெரியும் கோபம், வாள் சுழற்றும் வீரம் என்று ஹீரோவுக்கான மெட்டீரியலாய் பிரபாஸ் பின்னி எடுக்கிறார்.

பல்வாள்தேவனாக நடித்திருக்கும் ராணா விறைப்பும், முறைப்புமாக வந்துபோகிறார். பலசாலியாக தன்னை நிரூபிக்க பார்வையால் மெனக்கெடுகிறார். பிரபாஸுக்கு இணையான காட்சிகளில் ராணா வரும்போதெல்லாம் எந்த குறைவுமில்லாமல் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.

கோபமும் வீரமுமாய் இருக்கும் தமன்னா காதலில் கசிந்துருகும்போதும், பிரபாஸூடன் நெருக்கம் காட்டும்போதும் பளிச்சென்று மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

ரம்யா கிருஷ்ணனின் கம்பீரமும், சத்யராஜின் நடிப்பும் படத்துக்கு மிகப் பெரிய பலம். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்கள்.

எகத்தாள சிரிப்பும், தந்திரப் பார்வையிலும் நாசர் கதாபாத்திரத்துக்கான தேவையை நிறைவேற்றுகிறார். ரோகிணி, அனுஷ்கா, காலகேயனாக நடித்திருக்கும் பிரபாகர், ஒரே காட்சியில் வந்து போகும் சுதீப் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

பிரபாஸ் சிவலிங்கத்தை அருவியில் வைக்கும் காட்சி, போர்க்களக் காட்சிகள், போர்க்களத்தில் பிரபாஸ் கையாளும் புத்திசாலித்தனமான போர் முயற்சிகள், சத்யராஜ் பிரபாஸ் யாரென்று தெரிந்ததும் கலங்கித் தவிக்கும் காட்சி என பல காட்சிகள் மனதுக்கு நிறைவை ஏற்படுத்துகின்றன.

படத்தில் உள்ள பாடல்கள் கொஞ்சம் வேகத்தடையாக அமைந்துவிட்டதை சொல்லியே ஆகவேண்டும். பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தால் திரைக்கதை வேகம் இன்னும் கூடியிருக்கும். அதுவும், எதிரியைத் தேட வரும்போது ஒரு குத்துப்பாட்டு அளவில் ஒரு பாடல் தேவையே இல்லாதது.

செந்தில்குமாரின் ஒளிப்பதிவு எல்லா அழகையும் அள்ளி வந்து கொட்டியிருக்கிறது. மரகதமணி(கீரவாணி)யின் இசை காட்சிக்கு ஒத்திசைவாய் பொருந்திப் போகிறது.

பீட்டர் ஹெய்னின் சண்டைக் காட்சிகள் ஆக்‌ஷன் படத்துக்கான எல்லா அம்சங்களையும் முந்திக்கொண்டு ரசிக்க வைக்கிறது.

சாபுசிரிலின் அரங்க அமைப்பு எது?, ஸ்ரீனிவாஸ் மோகனின் கிராபிக்ஸ் எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போட்டி போட்டு இருக்கிறார்கள்.

''வாக்கு கொடுத்தவங்க மறையலாம். வாக்குறுதி மறையாது.''

''விசுவாசத்தின் மொத்த உருவம் நீதான்.''

''ரெண்டு பேர்தான் அவனை பார்க்கணும்னு நினைக்குறோம். நீ சாகுறதுக்குள்ள பார்த்துடமாட்டோமான்னு நினைக்குற. நான் இன்னொரு முறை சாகடிக்கமாட்டோமான்னு நினைக்குறேன்''

இதுபோன்ற மதன் கார்க்கியின் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

அந்த கிளைமாக்ஸ் காட்சியில் வைக்கும் ட்விஸ்ட் தான் ஏகப்பட்ட யோசனைகளைக் கிளப்புகிறது.

இதுக்குள்ள முடிச்சிட்டாரா? இரண்டாவது பாகம் எடுக்குறது நல்லதுதான். ஆனா, முழு நிறைவா படம் முடியலையே என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனாலும், இந்த அளவு ஃபெர்பெக்‌ஷனுக்காக கடுமையாக உழைத்ததை அப்படியே நம் கண் முன் படமாகக் காட்டியதற்காக 'பாகுபலி'யைக் கொண்டாடலாம்.

தயாரிப்பாளர் முதலீட்டைக் கொட்டுகிறார் என்பதற்காக சினிமாவில் பிரம்மாண்டத்தைத் திணிப்பதற்கும், கதைக்கும் திரை வடிவத்துக்கும் தேவை என்பதற்காக பிரம்மாண்டத்தை பயன்படுத்துவதற்குமான வித்தியாசத்தை எளிய ரசிகரையும் உணர வைத்திருக்கிறது. அதேவேளையில், தென்னிந்திய சினிமாவின் வல்லமையை 'இந்தி'ய சினிமா துறையினருக்கு மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியிருக்கிறது பாகுபலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x