Published : 28 Oct 2019 10:16 AM
Last Updated : 28 Oct 2019 10:16 AM
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம், உலகளவில் மொத்த வசூலில் 100 கோடியைக் கடந்துள்ளது.
மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், அதிக விலை கொடுத்து இதன் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார்கள்.
தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் சுமார் 83 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது.
ஆனால், விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால் முக்கிய திரையரங்குகள் அனைத்திலுமே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே திரையிடப்பட்டு வருகின்றன.
உலகளவில் மொத்த வசூலில் சுமார் 100 கோடியைக் கடந்து சாதனை புரிந்துள்ளது 'பிகில்'. அமெரிக்காவில் இதுவரை 940K டாலர்கள் வசூல் செய்துள்ளது. இன்றைய வசூலின் மூலம் 1 மில்லியன் டாலரைத் தொடும் என்பது உறுதியாகிறது. இங்கிலாந்தில் 2.31 கோடி ரூபாயும், ஆஸ்திரேலியாவில் 1.59 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் வெள்ளிக்கிழமை - 1.79 கோடி, சனிக்கிழமை - 1.73 கோடி, ஞாயிற்றுக்கிழமை - 1.74 கோடி என மொத்தமாக இதுவரை 5.26 கோடி வசூல் செய்துள்ளது.
தெலுங்கில் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் சாதனை புரிந்துள்ளது 'பிகில்'. மொத்தமாக 10.5 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றிய விநியோகஸ்தர்களுக்கு போட்ட பணம் திரும்ப வந்துவிடும். அடுத்த நாட்களில் வரும் வசூல் அனைத்தும் லாபமே. விஜய் படங்களுக்குத் தெலுங்கில் மட்டுமே மார்க்கெட் குறைவாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் வசூல் நடிகராக வலம்வரத் தொடங்கியுள்ளார் விஜய். கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சுமார் 10 கோடியைத் தாண்டியுள்ளது வசூல்.
தமிழகத்தின் மொத்த வசூல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாயைத் தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் எவ்வளவு தொகை என்பது தெரியவரும். மேற்கண்ட வசூல் கணக்குகளைக் கூட்டிப் பார்த்தால் உலகளவில் 100 கோடி வசூலை 'பிகில்' படம் கடந்துள்ளது உறுதியாகியுள்ளது. 'துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அனைத்து மொழிகளிலுமே விஜய் படம் நல்லபடியாக வசூல் செய்து வருகிறது. 'புலி', 'ஜில்லா' மற்றும் 'தலைவா' ஆகிய படங்களைத் தவிர்த்து இதர விஜய் படங்கள் அனைத்துமே 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய படங்கள் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment